Tamil Nadu Latest News Updates: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று (ஆக. 27) பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "அரசியலில் கருத்து மாற்றம் இருக்கலாம். ஆனால் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அண்ணாமலையின் பேச்சு அதிமுக பொதுச்செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்வதாக இருந்தது, அது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலையை பொருத்தவரை அவரின் நிலைப்பாடு என்னவென்றால் அவர் மாநிலத் தலைவர் அல்ல, பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு மேனேஜர். இந்த மேனேஜர் மு.க.ஸ்டாலின் போடும் ஆட்டத்திற்கெல்லாம் சேர்ந்து ஆடுகிறார். தேர்தல் காலத்தில் மு.க.ஸ்டாலின் பாஜகவுக்கும், எங்களுக்கும் ரகசிய கூட்டணி என்று சொல்லும்பொழுது அண்ணாமலை எந்த இடத்திலும் மறுக்கவில்லை.
திமுக - பாஜக ரகசிய கூட்டணி?
திமுக பாஜக என்ற இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாக சேர்ந்து ரகசிய கூட்டணி அமைத்துள்ளது. இது பெரிய அளவிற்கு விவாதப்பொருளாக ஆன பின், ஸ்டாலின் பேச்சைக் கேட்டு அப்படி எல்லாம் இல்லை என்று அண்ணாமலை மேடையை அநாகரிகமாக பயன்படுத்தியதுதான் இது.
அண்ணாமலை வெறும் 3 ஆண்டுகளாகதான் அரசியலில் உள்ளார். எங்கள் பொதுச் செயலாளர் தகுதி என்ன? கிளைச் செயலாளர், பகுதி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர். கொடி பிடிக்கும் தொண்டன் கூட முதலமைச்சராக அரசு காரில் வர முடியும் என்றால் அது அதிமுகவில் தான் நடக்கும்.
மேலும் படிக்க | வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்: அண்ணாமலைக்கு தமிழிசை அட்வைஸ்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்...
2026ஆம் ஆண்டில் ஆட்சி அமைக்கும் வல்லமை பெற்ற கட்சியின் பொதுச்செயலாளரை பற்றி பேச அவருக்கு தகுதி உள்ளதா? ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரை நிற்க வைத்து விடுவாரா? ஜெயித்து ஆட்சியை பிடித்து விடுவார்களா? அத்தனை உறுப்பினர்கள் கூட இல்லை. கற்பனையில் இன்று அரசியல் செய்து வருகிறார்.
மின்மினி பூச்சி போல் விட்டில் பூச்சி போல் பேசி வருகிறார் அண்ணாமலை. திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார். அதற்கு முதலமைச்சரோ ஆர்.எஸ்.பாரதியோ பதிலளிக்கவில்லையே ஏன்?. குதிரை ஓட்டம் ஓடும் மாபெரும் இயக்கம், அதிமுக. இந்த இயக்கத்தை ஒழிக்க கருணாநிதியின் முப்பாட்டனால் கூட முடியவில்லை. அதிமுகவை தொட்டு பார்த்தால் கெட்டுப் போவார்கள். இதுதான் வரலாறு.
அண்ணாமலை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது. நேற்று பிறந்த மூன்று ஆண்டு குழந்தை அது. ஆலமரம் போன்ற இயக்கத்தை அழிப்பேன் என்று பேசுவது வேடிக்கையானது. ஒருபுறம் அண்ணாமலை லண்டன் செல்கிறார். மறுபுறம் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். இரண்டு பேரும் அங்கு போய் என்ன பேசுவார்கள் என்று தெரியவில்லை.
'எந்த கொம்பனாலும் முடியாது'
இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைவரை, மேனேஜர் போன்ற ஒருவர் இழிவுபடுத்துகிறார் என்றால் விட்டில் பூச்சி கடைசி காலத்தில் பல்ப் பியூஸ் போவது போல்தான். ஆட்சி அமைப்பது என்பது எந்த காலத்திலும் உங்களுக்கு பகல் கனவு தான். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவை ஒழிக்க உங்க அப்பா இல்லை, அவரின் அப்பாவாக வந்தாலும் சரி எந்த கொம்பனாக இருந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது" என சீறினார்.
மேலும் படிக்க | கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - ஆர் எஸ் பாரதி!
வரக்கூடிய தேர்தல்களில் அதிமுகவுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது என்று அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு, "நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து நின்றதா? பாமக உள்ளிட்ட பல கட்சிகளை சேர்த்துக்கொண்டு தான் இந்த வாக்குகளை பெற்றுள்ளார்கள். இல்லையெனில் நோட்டாவோடுதான் போட்டி போடுவார்கள். 2026இல் பாஜக நோட்டாவுடன் தான் போட்டி போடும்" என்றார்.
கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்து மறைமுகமாக தாக்கிப் பேசியது குறித்த கேள்விக்கு," ஆர்.எஸ்.பாரதிக்கு இப்போதாவது எம்.ஜி.ஆர் பற்றிய அருமை பெருமைகளை உணர்ந்தாரே. எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம், அவரோடு யாரையும் ஒப்பிட முடியாது. அவரின் அருமை பெருமையை ஆர்.எஸ்.பாரதி ஒப்புக்கொண்டதற்கு நன்றி" என்றார்.
'பத்த வச்சுட்டியே பரட்ட'
தொடர்ந்து பேசிய ஜெயகுமார்,"ஸ்டாலின், ரஜினிகாந்தை வைத்து துரைமுருகனை மட்டம் தட்டி உள்ளார். துரைமுருகன் ரஜினிகாந்தை மட்டம் தட்டியுள்ளார். ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு, ரஜினி பேசி, அதை உதயநிதி வழிமொழிந்தது 'பத்த வச்சுட்டியே பரட்ட' என்பதை போல் உள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 264 படகுகள் இலங்கையில் மட்டும் சிறையில் உள்ளது. 34 மீனவர்கள் இன்னும் சிறையில் உள்ளார்கள். இவர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள்? மத்திய அரசை எதிர்த்து வாதாடி, போராடி படகுகளையும் மீனவர்களையும் மீட்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
கார் ரேஸ் தேவையா...?
சிறு தொழிலை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழ்நாடே ஒட்டுமொத்தமாக பற்றி எரிகிறது. சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. நாடு முழுவதும் மோசமாக உள்ளது. இப்போது இவர்கள் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார்கள். ஏற்கனவே சிங்கப்பூர், துபாய் சென்றார்கள். அதைப்பற்றிய தகவல்கள் ஒன்றும் இல்லை. அதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை கொடுங்கள்.mநாட்டு மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
சர்வதேச கார் ரேஸ் தமிழ்நாட்டுக்கு தேவையா? இரண்டு நாட்கள் கார் ரேஸ் நடக்குது. இரண்டு நாட்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதற்கு யார் பொறுப்பு?. தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு வீரர் கூட இந்த சர்வதேச கார் பந்தயத்தில் இல்லையே? ஏன்?... நல்லா இருக்கும் சாலையை தோண்டி போட்டுள்ளார்கள். செவ்வாய் கிரகத்தில் பயணிப்பது போல் உள்ளது.
திமுக ஒரு கார்ப்பரேட், பாஜக மோடி அரசு ஒரு கார்ப்பரேட். இரண்டும் சேர்ந்து நாட்டை நாசம் ஆக்கி வருகிறது. குழந்தைகள் படிக்கும் புத்தகங்களின் விலை ஏறிவிட்டது. பால் விலை ஏறிவிட்டது. ஸ்டாலினால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சரவை சகாக்களை கூட அவரால் நம்ப முடியவில்லை. ராஜ்நாத்சிங்கை அழைத்து வந்து பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்" என தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் விமர்சித்தார்.
மேலும் படிக்க | இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ