'நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது...' பாஜக நிர்வாகி அட்வைஸ்!

BJP Response To Vijay NEET Speech: உதயநிதி ஸ்டாலின் போல பேசமால் நடிகர் விஜய் ஆராய்ந்து பண்போடு பேச வேண்டும் என பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jul 4, 2024, 10:05 AM IST
  • வரும் ஜூலை 6 அன்று பாஜக செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது.
  • இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
  • நீட் தேர்வுக்கு எதிரான விஜய்யின் பேச்சு பரபரப்பை உண்டாக்கியது.
'நடிகர் விஜய், உதயநிதி போல பேசக்கூடாது...' பாஜக நிர்வாகி அட்வைஸ்! title=

BJP Response To Vijay NEET Speech: தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை 6ஆம் தேதி சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய வேளாண் அமைச்சர் சிவாரஜ் சிங் செளகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில் மொத்தம் 5,000 பேர் பங்கேற்க உள்ளனர். பாஜகவின் இந்த செயற்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரூ வெங்கடாஜலபதி மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் நேற்று (ஜூலை 3) பார்வையிட்டார்.

2026க்கு பிள்ளையார் சுழி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெறுவதற்கான ஒரு பிள்ளையார் சுழியாக இந்த சிறப்பு செயற்குழு கூட்டம் இருக்கும். அத்துடன் போதைப்பொருள் மற்றும் கள்ளாசாரய மரணங்களில் இருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும் படிக்க | என்னது? நடிகர் விஜய் ஒன்னாங்கிளாஸ் பாஸ் பண்ணலையா? என்ன கொடுமை சார் இது?

'விஜய் மக்களை சந்திக்க வேண்டும்'

நீட் தேர்வு பற்றி கருத்து சொல்லும் விஜய் முதலில் மக்களை சந்திக்க வேண்டும். எதற்காக நீட் வேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் விஜய்யிடம் கேட்க வேண்டும். குறிப்பாக நீட் வேண்டாம் என்பதற்கு விஜய் 3 காரணங்களை கூற வேண்டும். நடிகர்களை திரையில் பார்த்து ரசிக்கத் தயாராக இருக்கும் மக்கள், ஏமாந்து அவர்கள் பின்னால் செல்ல தயாராக இல்லை. 

தமிழகத்திற்கு தேவையான நல்ல தலைவர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். அவர்கள் தலைமையில் 2026ல் தமிழகத்தில் நல்லாட்சி அமையப்போகிறது. எனவே விஜய் அவருக்கு முன்னால் அரசியலுக்கு வந்த நடிகர் உதயநிதி போல பேசாமல், ஆராய்ந்து உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு பண்போடு பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.

நீட் தேர்வால் 3 பிரச்னைகள் - விஜய்

முன்னதாக சென்னை திருவான்மியூரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் வாங்கிய மாணவ-மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நீட் தேர்வுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார். நீட் விவகாரத்தில் அவருடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் அவர் விவரித்தார். 

அதில், நீட் தேர்வில் தான் மூன்று பிரச்னைகளை பார்ப்பதாக தெரிவித்தார். அதில் மாநில உரிமைக்கு நீட் எதிராக இருப்பதாகவும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது அடிப்படையான கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிராக இருப்பதாகவும், நீட் முறைக்கேடுகள் அந்த தேர்வின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்துவிட்டதாகவும் விஜய் பேசியிருந்தார். 

பரபரப்பாகும் அரசியல் களம்

மேலும், நீட் விலக்கே நிரந்தர தீர்வு எனவும் தெரிவித்த அவர் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இடைக்கால தீர்வாக வேண்டுமென்றால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சிறப்பு பொதுப்பட்டியல் என்பதை உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தை கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார். ஒன்றிய அரசு என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்திய விஜய், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளுக்கு வேண்டுமென்றால் ஒன்றிய அரசு நீட் தேர்வை நடத்திக்கொள்ளட்டும் என்றார். 

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கும் என கடந்த பிப்ரவரியில் கட்சி தொடங்கிய போது விஜய் தெரிவித்திருந்த நிலையில், அதன் பின்னர் நேற்றைய அவரின் பேச்சு அரசியல் களத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்னரே, 2017ஆம் ஆண்டில் அரியலூரில் நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, அவர்களின் குடும்பத்தாரை நடிகர் விஜய் சென்று சந்தித்தார். எனினும், நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை விஜய் நேற்றுதான் பகீரங்கமாக அறிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

மேலும் படிக்க | 'நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம்' பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News