காவிரி நீர் பிரச்சனை, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக நீடித்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன.
செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
#TamilNadu: Commuters in Hosur say that the number of buses plying to Karnataka has been reduced in the wake of verdict in Cauvery water sharing dispute case, today. #CauveryVerdict pic.twitter.com/KX1LxoeAoq
— ANI (@ANI) February 16, 2018
இந்நிலையில், விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் கழித்து காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பையொட்டி இரு மாநிலங்களிலும் விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இருப்பினும் இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இன்று காலை முதல் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன. இதனால் ஓசூரில் இருந்து பொதுமக்கள் கர்நாடக மாநில பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் சென்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் தீர்ப்புக்கு பின்னர் இருமாநில எல்லையில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் இருமாநில எல்லையான அத்திப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை, தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரை தந்தாக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.