ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மத்திய அரசு நிலைபாடு... TTV கண்டனம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!

Updated: Jan 20, 2020, 01:19 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மத்திய அரசு நிலைபாடு... TTV கண்டனம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்போடு இருக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவிற்கு மட்டுமே எதிர்த்து வரும் பழனிசாமி அரசும், அதிக எம்.பிகளை வைத்திருக்கின்ற தி.மு.கவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு விவசாய சங்கங்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், மாநிலத்தின் உரிமையினை பறிக்கும் இந்த உத்தரவினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திஐ அனுமதிக்கமாட்டோம் என அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, தமிழக மக்களின் நலனை காக்க அதிமுக தலைமையிலான மாநில அரசு முன்வர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அவரைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MP செல்வராஜூம் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தனது கண்டனத்தினை பதிவு செய்தார். 

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் வெட்டப்படுவது விவசாயத்திற்கும், சுற்று சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த சேதுராமன் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு எதிரான நடைமுறைகளை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரிசையில் தற்போது டிடிவி தினகரன் அவர்களின் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.