கஜா புயல் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய வேளாண் அமைச்சகம் ரூ.173 கோடி நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய குழுவினர் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.
தாக்கல் செய்த அறிக்கையில் பேரில் மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில் தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் டெல்லியில் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங்கை சந்தித்து டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக சேத விவரங்களையும், அதற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.
இதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராதா மோகன்சிங் கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிக்காக மத்திய வேளாண்மைத் துறை சார்பில் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
இதில் தென்னை மரங்களுக்கு ரூ.93 கோடியும், தோட்ட பயிர் சாகுபடிக்கு ரூ.80 கோடியும் ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.