Chennai Doctor Stabbed Latest News Updates: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்து உள்ளார்.
அப்போது அவரிடம் சிகிச்சைக்கு வருவது போல் வந்த 25 வயதான இளைஞர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தி உள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தெறித்து ஓடி உள்ளனர். மேலும் இதில் கத்திக்குத்து அடைந்த மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். சிலர் அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து சம்பவத்தின் முழு பின்னணி
மேலும் இச்சம்பவம் குறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போலீசார் மருத்துவர் கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் என்ற அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்ரனர். மேலும் மருத்துவரை குத்தியை கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | 2026 தேர்தலில் இணையும் அதிமுக - பாஜக? எச். ராஜா சொன்ன பதில்!
இதையடுத்து விக்னேஷ்வரன் உடன் வந்த மேலும் ஒருவர் என மொத்தம் இரண்டு பேரை கைது செய்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ்வரனின் தாயாருக்கு கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திட்டமிட்ட தாக்குதல்
அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், இது திட்டமிட்டப்பட்டு செய்த தாக்குதல் என்பதையும் விக்னேஷ்வரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டில் இருந்தே கத்தி எடுத்து வந்ததாகவும், தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாகவும் விக்னேஷ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
அரசு மருத்துவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அடுத்து அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். மருத்துவர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மருத்துவர் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அந்த பேச்சுவார்த்தையின் போது மருத்துவர் சங்கத்தினர் தங்கள் தரப்பில் 13 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தொடர்ந்து, மருத்துவர்களின் இந்த கோரிக்கைகள் குறித்து மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மருத்துவர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்
- பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிக்கு உரிமைத்துடன் கை துப்பாக்கி வழங்க வேண்டும்.
- நோயாளிகளின் கையில் கூர்மையான ஆயுதங்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து மருத்துவமனைகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.
- மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நோயாளிகளை பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட நோயாளிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும்படி சிபாரிசு செய்வதை தவிர்க்க வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை புதிய மருத்துவமனைகளை திறக்க கூடாது.
- மருத்துவமனைகளில் சிசிடிவி உள்ளிட்ட இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பகுதி முழுவதுமே சிசிடிவி பொருத்த வேண்டும்.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உயர்த்திய தமிழக அரசு! யாருக்கு கிடைக்கும் இந்த பணம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ