அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.       

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2023, 08:02 AM IST
  • திமுக இந்த விபத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை - ஆ. ராசா
  • ரயில் விபத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லை - ஆ.ராசா
  • கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை - ஆ. ராசா.
அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா! title=

A Raja About Odisha Train Accident: கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் நேற்று முன்தினம் (ஜூன் 2) மாலை ஒடிசா மாநிலம் பாலசோரில் பயங்கரமாக மோதி விபத்தை சந்தித்தன. மாலை 6.50 மணியளவில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த லூப் தண்டவாளத்தில்,  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் கோளாறு காரணமாக சென்றுவிட்டது என கூறப்படுகிறது. 

இதனால், சரக்கு ரயிலில் மோதிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மெயின் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதாவது, 7.10 மணிக்கு பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ், மெயின் தண்டவாளத்தில் சரிந்துகிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் மோதி விபத்தானதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுவரை, சுமார் 288 பேர் உயிரிழந்தனர் என்றும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன. கொல்கத்தாவில் இருந்து தெற்கே 250 கி.மீ., தொலைவிலும், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 170 கி.மீ., வடக்கே உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையம் அருகே இந்த ரயில் விபத்து நடந்தது. விபத்துக்குள்ளான ரயில்கள் சென்ற பாதையில், மோதலை தடுக்கும் கவாச் சாதனம் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 'மறு வாழ்வு பெற்றுள்ளோம்' ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் சென்னையில் கண்ணீர்..!

அரசியல் செய்ய விரும்பவில்லை

இந்நிலையில், ரயில் விபத்து குறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா நேற்று பேட்டியளித்தார். அதில், பேசிய அவர்,"ரயில் விபத்தை திமுக அரசியலாக்க விரும்பவில்லை. இருப்பினும், இந்திய வரலாற்றில் லால் பகதூர் சாஸ்திரி, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் அவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது ஏற்பட்ட ரயில் விபத்துகளுக்கு பொறுப்பு இருக்கின்றனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகரித்துவிட்டது.

TCAS - KAVACH

மேலும், இதையே மம்தா பானர்ஜியும், தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அருகில் வைத்துக்கொண்டே குற்றஞ்சாட்டியுள்ளார். அதாவது,'எங்களின் (காங்கிரஸ்) ஆட்சி காலத்தில் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்க Train Collision Avoid System (TCAS) என்பதை கொண்டு வந்தோம். அதில், எங்களுக்கு பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நீங்கள் (பாஜக) ஆட்சிக்கு வந்த பின் அதன் பெயரை KAVACH என பெயர் மாற்றி, அதை பொருத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்தீர்கள்' என மம்தா குற்றஞ்சாட்டுகிறார்.

நீடிக்கும் மௌனம் 

மொத்தம் ரயில்வே பாதை 70 ஆயிரம் கி.மீ உள்ளது. ஆனால், வெறும் 1500 கி.மீ தூரத்திற்கு மட்டுமே KAVACH சாதனத்தை பொருத்தியுள்ளனர். இது 2 சதவீதம் கூட இல்லை. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் முன்னிலையிலேயே, மம்தா பானர்ஜி இத்தகைய குற்றம்சாட்டுகளை முன்வைக்கிறார். ஆனால், அவர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார். பிரதமரும் இதுவரை இதுகுறித்து பதிலளிக்கவில்லை. 

யார் பொறுப்பு?

இந்த விபத்து எப்படி நடந்தது?. ஒரு அமைப்பின் கோளாறா அல்லது தனிநபர் தவறா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். மேலும், ஒரு அமைப்பின் கோளாறு என்றால் அதற்கு யார் பொறுப்பு, இதற்கு பொறுப்பேற்கும் வகையில் எந்த நடவடிக்கையாவது முன்னெடுக்கப்பட்டுள்ளதா?. இதே தமிழ்நாட்டில் ஒரு பிரச்னை நடந்தால், முதலமைச்சரோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரோ பதவி விலக வேண்டும் என கூறும் பாஜகவினர், அதிமுகவினர் ஏன் தற்போது மௌனம் காக்கின்றனர். ஆனால், அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என நாங்கள் (திமுக) கூறவில்லை, இதனை அரசியலாக்கவும் விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 

ஸ்தம்பித்திருக்கும் மத்திய அரசு...

விபத்துக்கு பின் நடவடிக்கையை விட, இதுபோன்ற விபத்துகளை தடுக்க மத்திய அரசு என்ன செய்திருக்கிறது. ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. அவர்களுக்கே என்ன செய்வது என புரியவில்லை. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை. ரயில் விபத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு தெரியவில்லை. CAG, CBC அறிக்கையில் தவறு செய்யக்கூடிய அமைச்சகத்தில் ரயில்வே உள்ளது" என குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன? கவாச் சிஸ்டம் Not Available...! - அரசுக்கு வலுக்கும் கண்டனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News