இரண்டு வழக்குகள் மட்டுமல்ல... 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை: மு.க.ஸ்டாலின்

2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், கவலைப்பட மாட்டோம். தி.மு.க பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2020, 06:52 PM IST
இரண்டு வழக்குகள் மட்டுமல்ல... 2000 வழக்குகள் போட்டாலும் கவலையில்லை: மு.க.ஸ்டாலின் title=

2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், கவலைப்பட மாட்டோம். தி.மு.க பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

மணவிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, அவர்களை வாழ்த்தி பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றி பேசியது,

தமிழ்நாட்டில் தற்போது ஓர் ஆட்சி நடைபெறுகிறது. அதை ஆட்சி என்று சொல்வதை விட காட்சி என்று தான் சொல்ல வேண்டும். அதை மாற்றுவதற்கான தேர்தலை விரைவில் நாம் சந்திக்க இருக்கிறோம். 2021-ல் தேர்தல். சரியாக 17 மாதங்கள் தான் இன்னும் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தை நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்? நாட்டில் என்ன நிலைமை? உள்ளாட்சித் தேர்தலில் நாம் சற்றே அலட்சியமாக இருந்து விட்டதாகவும், அதனால் ஆங்காங்கே சில தவறுகள், முறைகேடுகள் நடந்து தி.மு.க.-வின் வெற்றி தடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.

ஆனால், அலட்சியமாக இல்லாமல் கவனமாக இருந்ததால் தான் இந்த அளவுக்கேனும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது. இல்லையென்றால் இன்னும் மோசமாக போய் இருக்கும். அதுதான் உண்மை. விழிப்போடு நம்முடைய தோழர்கள் இருந்த காரணத்தால்தான், சில இடங்களில் அட்டூழியங்களைத் தடுத்து 65 சதவீதம் பெற்றியைப் பெற்றுள்ளோம். முறையாக நடந்திருந்தால், எண்ணி முடித்ததை முறையாக அறிவித்திருந்தால் கூட, 85 சதவீதம், 90 சதவீதம் நாம் தான் வெற்றி பெற்றிருப்போம். 

அதனால்தான் தொடர்ந்து நீதிமன்றத்தை நாம் நாடினோம். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களை நாடினோம். நீதிமன்றம் சென்றுதான் இந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்பது உண்மை. இல்லையென்றால் இன்னும் மோசமான நிலையிலே அநியாயங்கள், அக்கிரமங்கள் செய்து நம்முடைய இந்த வெற்றியைக் கூட தடுத்திருப்பார்கள். அதனால்தான் இன்று ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள், விதவிதமான பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2 நாட்களுக்கு முன்னர் என் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 வழக்குகள் என்ன, இரண்டாயிரம் வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தி.மு.கழகம் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்.

என் மீது வழக்கு போடும் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவ படிப்புக் கனவை, நிறைவேற விடாமல் தடுக்கும் 'நீட்' தேர்வைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் இந்த ஆட்சிக்கு இருக்கிறதா? சட்டமன்றத்தில் 2 முறை தீர்மானம் போட்டோம். எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமனதாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். 

அது என்னவாயிற்று என இதுவரை இந்த அரசு கேட்டிருக்கிறதா? இல்லை. 'நீட்' தேர்வே தமிழகத்திற்குள் வராது என சட்டமன்றத்தில் சொன்னார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் பேசினார்கள். ஆனால் தடுத்து நிறுத்தினார்களா? என்றால் இல்லை.

விவசாயிகளைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன நிலை? சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் அனுமதி கேட்கவேண்டிய அவசியம் இல்லை என பட்டவர்த்தனமாக மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை இவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இன்று நாடு போய்க்கொண்டிருக்கிறது. இதை டெல்டா பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்து பார்த்து, உங்களுக்காக உழைக்கும், உங்களுக்காக பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் பேசினார்.

Trending News