பாஜக-விற்கு எதிராக அணி திரட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களின் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-விற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகின்றார்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சமீபத்தில் சந்தித்து பேசினார். தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.
Andhra Pradesh CM N Chandrababu Naidu meets DMK President MK Stalin at his residence in Chennai. pic.twitter.com/WCemVqPcKt
— ANI (@ANI) November 9, 2018
இதனையடுத்து நேற்றைய தினம் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா மற்றும் கர்நாடக முதல்வர் HD குமாரசாமி ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
இந்நிலையில், இன்று மாலை திமுக தலைவர் MK ஸ்டாலின் அவர்களை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் சந்தித்து பேசினார். சென்னை வந்த சந்திரபாபு நாயுடு அவர்களை ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வின் போது துரை முருகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் சேர்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியாதகவும், ஆந்திர முதல்வரின் முயற்சிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும் ஸ்டாலின் சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு அவர்கள்... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சில வேறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளது, எனினும் எங்கள் முயற்சி தொடரும். இந்த சந்திப்பினை அடுத்து மம்தா பேனர்ஜி அவர்களையும் சந்திக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.