முடிவுக்கு வராத ஒற்றைத் தலைமை பிரச்னை:
அதிமுகவில் விஸ்வரூபமெடுத்த ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறி நிலையில் நீடிக்கிறது. நிர்வாகிகளில் சிலர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் பலர் எடப்பாடி பழனிசாமி பக்கமும் அணிவகுத்துள்ளதால் கட்சி பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்காக நடைபெறும் இந்த சண்டையால் இரட்டை இலை சின்னமும், கட்சியின் கொடியும் முடங்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
கையெழுத்திடுவதில் சிக்கல்:
இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அந்த கட்சிகளின் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற 2 படிவங்களை சமர்பிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட கட்சி தலைவர் கையெழுத்திட்டால் தான் அந்த படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சனையால் இந்த படிவங்களில் யார் கையெழுத்திடுவது எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரணம், உட்கட்சி பிரச்சனையால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | EPS vs OPS : முடங்கியது இரட்டை இலை சின்னம்., இந்த தேர்தலில் யாருக்கும் இல்லை
இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம்:
இதனிடையே தேர்தல் படிவங்களில் கையெழுத்திட தான் தயாராக உள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாரா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு தனக்கு கடிதம் எழுதுவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:-
ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் பதில் கடிதம்:
கழகப் பொருளாளர் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.
கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR