இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கிருஷ்ணா கொலையாளி ஆனது எப்படி?

மயிலாப்பூர் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட  விவகாரத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர் கிருஷ்ணா தனது முதலாளிகளை தானே திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2022, 02:03 PM IST
  • தம்பதியின் மகன் மற்றும் மகள் நேற்று நள்ளிரவு சென்னை வந்தனர்.
  • சிதிலமடைந்து காணப்படுவதால் இருவரின் உடலையும், நேரடியாக இடுகாட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
இரட்டை கொலையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கிருஷ்ணா கொலையாளி ஆனது எப்படி? title=

மயிலாப்பூர் தம்பதிகள் கொலை செய்யப்பட்ட  விவகாரத்தில் அவர்களினுடைய இறுதி சடங்குகளை செய்ய மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் இருந்து  சென்னை வந்துள்ள நிலையில் இன்று பிற்பகலில் மயிலாப்பூர் உள்ள இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்த ஶ்ரீகாந்த்  மற்றும் அவரது மனைவி அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மகள் சுனந்தா மற்றும் மகன் சஸ்வத்தை பார்க்கச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஶ்ரீகாந்த் தனது மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து சென்னை மயிலாப்பூர் இல்லம் வந்துள்ளனர். அங்கு அவரது  கார் ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தம்பதியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர்.

Mylapore Murder

இந்த கொலை வழக்கில் ஓட்டுநர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஶ்ரீகாந்துக்கு சொந்தமான மகாபலிபுரம், நெமிலிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட தம்பதியின் உடலை ஞாயிற்றுக்கிழமை  கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து உடல் கீழ்பாக்கத்தில் தனியார் இறுதி சடங்கு செய்யும் நிறுவனத்தில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.இறுதி சடங்குகள் மேற்கொள்ள தம்பதியின் மகன் மற்றும் மகள் நேற்று நள்ளிரவு சென்னை வந்தனர்.

இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெற்றோரின் உடல் மயிலாப்பூர் இல்லத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்களின் உடல் முழுவதும் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் இருவரின் உடலையும், நேரடியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டுக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என தெரிகிறது.

Mylapore Murder

இந்நிலையில், மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனு ராதாவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

ஸ்ரீகாந்தின் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா, தனது நண்பர் ரவிராயுடன் சேர்ந்து திட்டம் போட்டு இருவரையும் கொன்று விட்டு வீட்டில் இருந்த 1000 பவுன் நகைகளை கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் கிருஷ்ணா கொலையாளியாக மாறியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் படிக்க | மைலாப்பூர் இரட்டை கொலை - குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

Mylapore Murder

கொலையாளி கிருஷ்ணாவின் குடும்பத்துக்கும், தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் குடும்பத்துக்கும் இடையே 20 ஆண்டு காலமாகவே நல்ல உறவு இருந்து வந்தது. கிருஷ்ணாவின் தந்தை பெயர் லால் சர்மா. இவருக்கு இப்போது 75 வயதாகிறது.

இவர் மாமல்லபுரம் சூலேரிக்காடு பகுதியில் உள்ள டால்பின்சிட்டி பொழுது போக்கு பூங்காவில் பணியாற்றி வந்தார். அப்போது பூங்கா திடீரென மூடப்பட்டதையடுத்து மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் லால் சர்மா தவித்தார்.

4 குழந்தைகளில் மூத்த மகன்தான் தற்போது கொலையாளியாக மாறி இருக்கும் கிருஷ்ணா. மற்ற 3 பேரில் இருவர் பெண் குழந்தைகள். இன்னொருவன் கிருஷ்ணாவின் தம்பி. வேலை போய் விட்ட நிலையில் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்த லால் சர்மா குடும்பத்துக்கு ஸ்ரீகாந்த் வழிகாட்டி உள்ளார்.

பண்ணை வீட்டுக்கு சென்று லால்சர்மா வேலை கேட்ட போது ஸ்ரீகாந்த் பாவம் பார்த்து வேலை கொடுத்துள்ளார். இதையடுத்து லால்சர்மா பண்ணை வீட்டிலேயே தங்கி இருந்து வீட்டை பார்த்துக் கொண்டார்.

அப்போதில் இருந்தே சிறுவனாக இருந்த டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினான். லால் சர்மா தனது 2 மகள்களுக்கும் சென்னையில் வசிக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள் மாமல்லபுரம் அருகே உள்ள பேரூரில் வசித்து வருகிறார்கள்.

கிருஷ்ணாவுக்கு திருமணமாகி மனைவியும், 15 வயதில் மகனும் உள்ளனர். அவர்கள் நேபாளத்தில் வசித்து வருகிறார்கள்.

டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரோடு ஒட்டி உறவாடி வசதி வாய்ப்புடனேயே வாழ்ந்து வந்தான்.

ஸ்ரீகாந்த் குடும்பத்தினர், கிருஷ்ணாவை தங்களது மகன் போலவே பார்த்துக்கொண்டனர். அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். ஸ்ரீகாந்தின் பங்களா வீட்டில் கிருஷ்ணாவுக்கு தனி அறையையும் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.

ஸ்ரீகாந்தின் தந்தை ராஜகோபால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துள்ளார். அவர் டிரைவர் கிருஷ்ணாவிடம் அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருந்துள்ளார். 

Mylapore Murder

ஸ்ரீகாந்தின் மயிலாப்பூர் வீட்டில் நிறைய பணம் உள்ளது. நகைகள் உள்ளது எனது காலத்துக்கு பிறகு நீ ஸ்ரீகாந்துடனேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். 

இது போன்று வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் கிருஷ்ணாவிடம் தெரிவித்து வந்துள்ளனர்.

இப்படித்தான் சொத்து ஒன்றை விற்றது தொடர்பாக கிடைத்த ரூ. 40 கோடி பணம் பற்றியும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவிடம் கூறி உள்ளார்.

இப்படி ஸ்ரீகாந்தின் வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் கிருஷ்ணாவின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருக்கிறது. எத்தனை நாள்தான் டிரைவராகவே இருப்பது? என்று எண்ணிய கிருஷ்ணாவுக்கு எப்படியாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்கிற எண்ணம் ஆழமாக ஏற்பட்டது.

அப்போதுதான் ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் கொன்று விட்டு வீட்டில் இருக்கும் நகை-பணத்தை மொத்தமாக சுருட்ட வேண்டும் என்கிற கொடூர எண்ணமும் கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து தனது இந்த திட்டத்தை நிறைவேற்ற டார்ஜிலிங்கைச் சேர்ந்த நண்பர் ரவிராயை துணைக்கு அழைத்துள்ளார். இப்படி 3 மாதங்களுக்கு முன்பே கொலை சதி திட்டத்தை அரங்கேற்றிய கிருஷ்ணா, அதன் பின்னரும் நல்லவன் போலவே நடித்து பாசத்தை காட்டி வேஷம் போட்டுள்ளார்.

Srikanth Anuradha

அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சென்னைக்கு திரும்பும் நாளில் தீர்த்துக் கட்டும் எண்ணத்தோடு அந்த நாளுக்காக டிரைவர் கிருஷ்ணாவும், ரவிராயும் காத்திருந்தனர். இதன்படி கணவன்- மனைவி இருவரையும் கொன்று புதைத்துள்ளனர்.

எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடாது. யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. நாம் பலமுறை நண்பர்களோடும் உறவினர்களோடும் பேசி இருப்போம். இதனை 100 சதவீதம் உண்மையாக்கும் விதத்தில் மயிலாப்பூர் தம்பதியின் இரட்டை கொலை சம்பவம் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க | 9,494 காலிப் பணியிடங்கள் - TRB வெளியிட்ட அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News