என் பெயரில் எந்தவித சொத்தும் கிடையாது - எடப்பாடி பழனிச்சாமி!

மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்துள்ளதாக ஓபிஎஸ் மீது எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.  

Written by - RK Spark | Last Updated : May 11, 2023, 03:01 PM IST
  • ஒட்டகம் புகுந்த நிலையாக தற்போது ஓபிஎஸ் புகுந்துள்ளார்.
  • ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என உறுதியாகி இருக்கிறது.
  • ஒரே ஒரு ஆடியோவில் அரசு ஆடிப் போய்விட்டது.
என் பெயரில் எந்தவித சொத்தும் கிடையாது - எடப்பாடி பழனிச்சாமி! title=

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் டிடிவி தினகரன் ஒன்றிணைந்திருப்பது, மாய மானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் ஆகும்.  பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம் என்ற வகையில் தான் இந்த இணைப்பு உள்ளது.  டிடிவி தினகரன் ஒரு  துரோகி என ஓபிஎஸ் கூறி வந்தார். அதேபோல டிடிவி தினகரன் , ஓபிஎஸ் ஐ துரோகி என்று கூறி வந்தார்.  தற்போது இரண்டு துரோகிகளும் ஒன்று சேர்ந்து ஒரு அணியை உருவாக்கியுள்ளனர்.
டிடிவி தினகரனின் கூடாரம் காலி ஆகிவிட்டது, அதில் ஒட்டகம் புகுந்த நிலையாக தற்போது ஓபிஎஸ் புகுந்துள்ளார் என்றார்.

நேற்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி கொடுத்திருந்தார். அவர் எம்ஜிஆர் இருக்கும் போதே பாஸ்கர் ராவ் என்ற பட்டம் பெற்றவர். ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர். எம்ஜிஆருக்கும்,  ஜெயலலிதாவுக்குமே விசுவாசம் இல்லாதவர். அதிமுகவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார்.  அங்கும் விசுவாசமாக அவர் இல்லை. பின்னர் தேமுதிகவிற்கு சென்றார், அங்கும் விசுவாசமாக இல்லை.  இந்நிலையில் இப்போது பண்ருட்டி ராமச்சந்திரன்  பேட்டி  அளிப்பது விந்தையாக இருக்கிறது. அவர் எங்கு சென்றாலும், அந்த கட்சியை முடிந்து விடும்.  இதுவரை அப்படித் தான் நடந்திருக்கிறது. இன்று அவர் நிழல் கூட அவரிடம் வரவில்லை என்ற அவர், ஒரு கிளைச் செயலாளருக்கான தகுதி கூட பண்ருட்டியாருக்கு கிடையாது என்றார். 

தொடர்ந்து கூறிய அவர் நேற்றைய பண்ருட்டியார் பேட்டியில், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்,  ஜேசிபி பிரபாகரன் ஆகியோரை காணவில்லை. இப்போதே மூன்று பேரை காணவில்லை என்றார். ஓபிஎஸ் திமுகவிற்கு B team ஆக செயல்படுகிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அது இப்போது உண்மையாக இருக்கிறது. கிரிக்கெட் மேட்ச் பார்க்கச் சென்ற ஓபிஎஸ், ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசி உள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என உறுதியாகி இருக்கிறது என்றார். அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு ஆண்டு ஆட்சியில் ஊழல் நடந்து உள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு ஆடியோவில் அரசு ஆடிப் போய்விட்டது.

மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலின் அதிரடி... அண்ணாமலை மீது அவதூறு வழக்கு!

திமுக ஆட்சி இரண்டு ஆண்டு முடிந்திருக்கிறது. எல்லாத் துறையிலும் ஊழல் நடந்திருக்கிறது.  இதற்கு  சான்று தான் முன்னாள் நிதி அமைச்சர் , தகவல் தொழில்நுட்ப அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இன்னும் நிறைய ஆடியோ வரும் என சொல்லி இருக்கிறார்கள். இரண்டு ஆண்டில் இவர்கள் செய்த சாதனை 30 ஆயிரம் கோடி ஊழல் தான். இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரும் என்பதால் தான் பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவிலிருந்து நீக்காமல் உள்ளனர் என்றார். ஆளுநரை நாங்கள் சந்திக்கும் போது இது பற்றி விளக்கமாக தெரிவிப்போம் என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில்  சொத்துக்களை குறைத்து காட்டியதாக புகார் எழுந்துள்ளதே  என்ற கேள்விக்கு.

அரசியல் ரீதியாக என்னை ஏதும் செய்ய முடியவில்லை, இதனால் மிலானி என்ற  திமுக கட்சியை சேர்ந்தவர் மூலமாக  என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.  அதை சட்டப்படி சந்திப்போம். வருவாய் குறைவாக  காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். என்ன இருக்கிறதோ அதை தான் காட்டியுள்ளேன். நான் எந்த தொழிலும் செய்யவில்லை விவசாய மட்டும் தான் செய்கிறேன். எந்த சொத்தையும் மறைக்கவில்லை.  குறிப்பாக என் மீது எந்த சொத்தும் இல்லை. நான் இதுவரை என் பெயரில் எந்த சொத்தையும் வாங்கவில்லை. 
இது முழுக்க முழுக்க விதிமீறல் வழக்கு  ஆகும். எந்த விதிமுறை இருந்தாலும் ஓராண்டுக்குள் வழக்கு தொடர வேண்டும் ஆனால் இரண்டு ஆண்டு முடியும் நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கு என் தொகுதியான,  எடப்பாடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் . ஆனால் சேலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இதனை சட்டப்படி சந்திப்பேன் என்றார். 

திராவிடம் குறித்து தொடர்ந்து ஆளுநர் விமர்சித்து வருகிறாரே என்ற கேள்விக்கு, ஆளுநர் திமுக ஆட்சியை தான் விமர்சிக்கிறார். திமுக ஆட்சியில்  நடக்கும் ஊழல்களை கவர்னர் தெளிவாக சூட்டி காட்டுகிறார்.  அதனால் தான்  அவர் மீது திமுகவினருக்கு கோபம் வருகிறது. இதுப்பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக  தெரிவித்திருக்கிறார் என்றார்.  ஓபிஎஸ் அணியிலுள்ள வைத்தியலிங்கம்,  மனோஜ் பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கழகத்திற்கு ஊரு விளைவிப்பவர்களை  கட்சியில்  சேர்த்துக் கொள்ள மாட்டோம்,  தொண்டர்கள் என்ன கருதுகிறார்களோ அதை தான்  கட்சி செய்யும். நிறைய பேர் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அதிமுக என்பது எங்கள் தரப்பிற்கு வந்துவிட்டது.  ஓபிஎஸ் எங்க வேண்டுமானாலும் மாநாடு போடட்டும் கவலையில்லை. தேர்தல் ஆணையத்தின் மூலமும், நீதிமன்றம் மூலமும் எங்களுக்கு கட்சி கிடைத்திருக்கிறது என்றார்.

மேலும் படிக்க: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: நாசர் நீக்கம்! டிஆர்பி ராஜாவுக்கு பதவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News