சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் மக்களது கவனத்தைக் கவர்ந்த அரசியல் கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்றாகும். தேர்தலில் கிடைத்த மிகப்பெரும் தோல்வியையடுத்து கட்சியிலிருந்து பலர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய நிர்வாகிகளை கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி (Makkal Needhi Maiam), தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர்.
கமல்ஹாசன் தன் விருப்பப்படியே செய்கிறார் என்றும், கள நிலவரம் மற்றும் அடிமட்ட தொண்டர்களின் நிலையை எடுத்துக்கூற தாங்கள் முயற்சிப்பதை அவர் கேட்பதில்லை என்பதும் பலரது பெரிய குறையாக இருந்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் பொருட்டு கட்சிக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யப்போவதாக கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார்.
Makkal Needhi Maiam party new appointees announcement.#KamalHaasan #MakkalNeedhiMaiam pic.twitter.com/4Pqj16KHVn
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 26, 2021
அதற்கேற்ப, இன்று (ஜூன் 26) நடந்த கட்சியின் இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் (Kamal Haasan) கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றினார். இதன் உரையில் அவர், "கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன். புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.
புதிய மாநிலச் செயலாளர்கள் ஏற்கெனவே நமது கட்சியின் வேட்பாளர்களாகக் கடந்த சட்டச்பை தேர்தலில் களம் கண்டவர்கள்தான். எனினும், அவர்களைப் பற்றி மீண்டும் இங்கே குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். சிவ.இளங்கோ சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் நிறுவனர். மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அநீதிகளுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்த காரணத்தால் ஆட்சியாளர்களால் வேட்டையாடப்பட்டு சிறை சென்றவர்.
செந்தில் ஆறுமுகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 7 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு சமூகப் பணி செய்ய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக பணியை ராஜினாமா செய்தவர். 'நேர்மையான அரசியலின் மூலம் நல்லாட்சி' மலர வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 20 ஆண்டுகளாக உழைத்து வருபவர். சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்துவது என மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறார்.
சரத்பாபு தன் கடின உழைப்பாலும், திறமையாலும் வெற்றிகரமான தொழில்முனைவோராகத் திகழ்பவர். புட் கிங் அறக்கட்டளையை நிறுவி பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.
புதிய நியமனங்கள்:
1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்
2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்
3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு
4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு
7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்
8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்
9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்". என்று கூறினார்.
கடந்த தேர்தலில் (TN Election) எதிர்பார்த்த அளவு வெற்றியைக் காண முடியவில்லை என்றாலும், மக்கள் பணிகளில் ஈடுபட்டு, மக்களுக்காக பணியாற்றும் எங்கள் செயல்கள் நிற்காது என கமல்ஹாசன் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் படி புது நியமனங்களுடன் புதிய பொலிவுடன் மக்கள் நீதி மய்யம் மீண்டு வரும் என மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
ALSO READ: சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR