பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!

எவ்வித சலுகைகளையும் யாருக்கும் காட்டாமல், பெறப்பட்ட தேர்தல் நிதியை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட்டிருக்கிறோம் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை.  

Written by - RK Spark | Last Updated : Mar 18, 2024, 06:30 AM IST
  • மிரட்டித் தேர்தல் பத்திரங்களை பெற்ற பா.ஜ.க
  • அறிக்கை விடப் பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா?
  • திமுக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அறிக்கை.
பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி! title=

“யோக்கியன் வர்றான், சொம்பை எடுத்து உள்ளே வை" என்று சொல்வார்களே, அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். தான் வகித்த பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்களை மொத்தமாகத் தனது சம்பந்திக்கும், அவர் வழி உறவினர்களுக்கும் கொடுத்துச் சிக்கிக் கொண்டவர் பழனிசாமி. குட்கா விற்பனையாளர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காகத் தனியாக ஒரு அமைச்சரை வைத்திருந்தவர் பழனிசாமி. சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.  வருமான வரித்துறையினர் இவரது ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே சோதனை செய்தார்கள். டி.ஜி.பி.யே சிபிஐ விசாரணையில் சிக்கினார். தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணை ஆணையத்தில், 'முதலமைச்சரிடம் சொல்லி விட்டுதான் சுட்டோம்' என்று  குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி

மேலும் படிக்க | கள்ளுக்கடை திறப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு காரணம்? எச் ராஜா விளக்கம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கியவர்களைக் காப்பாற்றியவர் பழனிசாமி. கொடநாடு கொலை, கொள்ளையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளே பழனிசாமி பெயரை வெளியில் சொன்னார்கள். இப்படிப்பட்ட நீண்டதொரு 'குற்றப்பட்டியல்' கொண்ட பழனிசாமி, இன்று விடுத்த அறிக்கையில், பாவத்தைப் பற்றியெல்லாம் பாலபாடம் எடுத்துள்ளார். மண்புழுவைப் போல ஊர்ந்து போய் நாற்காலியைக் கைப்பற்றி, துரோகக் குணத்தால் நம்பிக்கைத் துரோகம் செய்து, பின்னர் பாஜகவின் பாதம் தாங்கி, அதனைத் தக்க வைத்து, இன்று பாஜக அமைத்துக் கொடுத்த திருட்டு வழியில் ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பழனிசாமிக்கு, பாவத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

திமுக சார்பில் யாரிடம் நன்கொடை பெற்றோமோ, அதனை வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளோம். இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒரு  நிறுவனத்தைக் குறிப்பிட்டு, அவர்களிடம் பணம் பெற்றது நியாயமா என்று கேட்டுள்ளார் பழனிசாமி. அதற்காக அந்த நிறுவனத்துக்கு எந்தச் சலுகையும் கழக ஆட்சியில் தரப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைப் போராடிக் கொண்டுவந்து நிறைவேற்றியது கழக அரசுதான். பழனிசாமி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் தடைச் சட்டம் செல்லாது, அது சட்டப்பூர்வமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னபோது, சட்டப்பூர்வமான ஒரு சட்டத்தை உருவாக்கியது கழக அரசுதான். அந்தச் சட்டத்துக்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வந்தார் ஆளுநர் ரவி. அவர் அதனைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். ஒப்புதலைப் பெற்றோம். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர்களைச் சந்தித்து பேசினார் ஆளுநர். அப்போது ஆளுநரைக் கண்டித்தாரா இந்த யோக்கியவான் பழனிசாமி?

இப்போது ஏன் அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி? தனது எஜமானர்களான பாஜகவைக் காப்பற்றுவதற்காக அறிக்கை விடுகிறார்! அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி, நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பணத்தைப் பறித்துள்ளது பாஜக. பாஜகவால் மிரட்டப்பட்ட 30 நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் அதிகளவு பணத்தை பாஜகவுக்கு வாரி வழங்கி உள்ளது. இதன் மூலமாக, 'மிரட்டிப் பணம் பறிக்கும் பாஜக' என்று அகில இந்திய அளவில் பாஜக அம்பலப்பட்டுள்ளது. பாஜகவால் இதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இத்தகைய பாஜக பற்றி பழனிசாமி ஏதாவது கண்டித்துள்ளாரா? 

'பாஜகவுடன் கூட்டணியே கிடையாது' என்று சொல்லும் பழனிசாமிக்கு, பாஜகவின் மிரட்டிப் பணம் பறிக்கும் மோசடித்தனத்தைக் கண்டித்து அறிக்கை விட முதுகெலும்பு உண்டா? ஏன் வாயை மூடிக் கொள்கிறார்? நாங்கள் யாரையும் மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் வசூலிக்கவில்லை என்பதை 'டெண்டர் மோசடி' பழனிசாமிக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.  நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களாம்! பழனிசாமி சொல்கிறார். அவர் கைக்கு அதிமுக எப்போது வந்ததோ அது முதல் அந்தக் கட்சி அதலபாதாளத்தில் போய்க் கொண்டு இருக்கிறது. நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பவர் அவர்தான். சொரணையற்ற பழனிசாமிக்கு எத்தனை தடவைதான் மக்கள் பாடம் புகட்டுவார்கள்?

மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News