தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மட்டும் அவனியாபுரம், பாலமேடி, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு, தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) அலங்காநல்லூரிலும் நடைபெற இருக்கிறது. இதனால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
இந்நிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இன்று காலை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். முதல் சுற்று தொடங்கி வாடிவாசல் வழியாக முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரர்களுக்கு ஏராளமான கார் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.