ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.

Last Updated : Jul 22, 2019, 02:11 PM IST
ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை சோதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு title=

அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சவுபாக்கியவதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் “புதுக்கோட்டை குலவைப்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய நிலையில் 2012 ஆகஸ்ட் மாதம் மதுரை நாயக்கன்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.
 
பணியில் சேருவதற்காக சென்றபோது, தன்னுடைய பணி ஆணையை பெற அதிகாரிகள் தரப்பில் பணம் கேட்கப்பட்டது. அதனை வழங்காததால் என்மீது முன்விரோதம் கொண்டு நான் முறையாக பணியாற்றவில்லை எனக்கூறி என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது முன்விரோதம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆகவே அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில், “பட்டதாரி ஆசிரியர் சவுபாக்கியவதி கற்பித்த வகுப்புகளில் தொடக்க கல்வி அலுவலர் சிறப்பு பார்வை மேற்கொண்டபோது அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவ மாணவிகள் பதில் அளிக்கவில்லை. ஆங்கில எழுத்துக்கள் கூட பல மாணவர்களுக்கு தெரியவில்லை. அதேபோல பாடக்குறிப்பு பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆசிரியை முறையாக பராமரிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து நீதிபதி, “ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையாக சோதித்தறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பெடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு பெருமளவில் முன்வைக்கப்படும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். 

மாணவர்களது அறிவு திறனை வளர்க்கும் வகையில் ஆசிரியர்களின் கற்பித்தல் சிறப்பானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வருவதையும், முறையாக கற்பிப்பதையும் உறுதி செய்ய பல்வேறு விதிகள் உள்ளன. ஆசிரியர்களுக்கு பல்வேறு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளன.

அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன், வாசிப்புத் திறன், எழுதும் திறன், பொது அறிவு திறன் ஆகியவற்றை மாணவர்களுடன் கலந்துரையாடி எழுத படிக்கச் சொல்லி அறிய வேண்டும் என ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அப்பகுதி மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பதாக கூற இயலாது. பெரும் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் ஊரகப் பகுதிகளை பின்புலமாகக் கொண்டு வந்தவர்களே.

மாணவரின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பாடம் நடத்துவதே ஆசிரியரின் கடமை. இந்த வழக்கை பொறுத்தவரை தொடக்க கல்வி அலுவலர் கேட்ட அடிப்படையான கேள்விகளுக்கு கூட மாணவர்கள் பதில் அளிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது . ஆகவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என அதிரடி உத்தரவு பிரப்பித்தார். மேலும் மனுதாரர் மீது துறை ரீதியான நடவடிக்கையைத் தொடரவும் அனுமதி வழங்கப்படுகிறது என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Trending News