மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: தங்க பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்...!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 09:15 PM IST
  • மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்
  • அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பட்டார்
  • தங்க பல்லக்கில் புறப்பட்டார் - பக்தர்கள் தரிசனம்
மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: தங்க பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்...!  title=

மதுரை சித்திரை திருவிழா

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருகின்ற 05ஆம் தேதி காலை 05.45 முதல் 06.15 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அழகர்கோவிலில் உள்ள ஸ்ரீகள்ளழகர் திருக்கோவிலில் கடந்த 01ம் தேதி விழா தொடங்கியதையடுத்து, ஸ்ரீகள்ளழகர் என்று அழைக்கக்கூடிய சுந்தராஜபெருமாள் தினமும் தொழுக்கினியான் அலங்காரத்தில்  திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கள்ளழகர் புறப்பாடு 

இதனைத்தொடர்ந்து மதுரை வைகையாற்றில் ஸ்ரீகள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளும் விழாவிற்காக, அழகர்கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் கண்டாங்கி பட்டு உடுத்தி, வால், வளரியுடன் "கள்ளழகர் வேடம் தரித்து தங்கபல்லக்கில்" ஆயிரக்கணக்கான  பக்தர்களில் கோவிந்தா கோஷத்துடன் மதுரை நோக்கி புறப்பாடாகி செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அழகர்கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி முன்பு உத்தரவு பெரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உத்தரவு கிடைத்த ஐதிகமாக கள்ளழகரை சுமந்து வரும் சீர்பாத தூக்கிகள் தங்கபல்லக்கினை குலுக்கி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து மதுரை நோக்கி கள்ளழகர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் படிக்க | அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு

தங்க குதிரையில் கள்ளழகர்

மதுரை நோக்கி செல்லும் கள்ளழர் வழிநெடுகிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட மண்டக படிக்களில் எழுந்தருளி, 04ம் தேதி காலை மதுரை மூன்றுமாவடி செல்லும் நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும், "எதிர்சேவை" நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் எழுந்தருளப்பட்டு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறும் நிலையில், பின்பு தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்று நோக்கி புறப்பாடாகி செல்வார். வழியில், பழமை வாய்ந்த ஆயிரம் பொன் சப்பரத்தில் தங்க குதிரையுடன் ஶ்ரீகள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு

இதனைத்தொடர்ந்து 05ம் தேதி அதிகாலை காலை 5.45 மணியிலிருந்து 06.15 மணி அளவில் மதுரை வைகை ஆற்றில் தங்ககுதிரை வாகனத்தில் இறங்குகின்றார். இதனைத் தொடர்ந்து 06ம் தேதி வண்டியூர் விரராகவபெருமாள் கோவிலில் சேஷ வாகனத்திலும், அதனைத்தொடர்ந்து கருடவாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும், இரவு மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது .

அழகர் கோவிலுக்கு திரும்புதல்

8 ஆம் தேதி இரவு மதுரை தல்லாகுளம் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அழகர்மலை திரும்பும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 09 ஆம் தேதி அதிகாலை  மதுரையிலிருந்து, அழகர்கோவிலுக்கு திரும்பும் கள்ளழகர்.  நண்பகல் 10.30 மணியில் இருந்து 11.30  மணியளவில் இருப்பிடமான அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலுக்கு வந்து சேர உள்ளார். இந்த விழாவிற்காக அழகர் கோவில் ஸ்ரீகள்ளழகர் திருக்கோயில் சார்பில், பக்தர்கள் விழாவினை கண்டுகளிக்கும் வகையில் 4-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு. மாவட்ட காவல்துறை சார்பில்  500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர் சுமந்து செல்வதற்காக 200க்கும் மேற்பட்ட சீர்பாத தூக்கிகள் கள்ளழகருடன் மதுரை புறப்பட்டு சென்றுள்ள நிலையில், அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை சென்று, மீண்டும் அழகர்கோவில் திரும்பும் வரை இவர்கள் சுழற்சி முறையில் சுவாமியை சுமந்து வலம் வருவார்கள். இன்று மதுரை நோக்கி புறப்படும் கள்ளழகர் மீண்டும் அழகர்கோவில் வரும் வரை 450க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருல்பாலிக்க உள்ளார்.

மதுரையில் கோலாகலம்

மதுரையில், சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களாக வைகையாற்றுக்கு தேற்கேயுள்ள மீனாட்சியம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் கொண்டாடப்பட்ட நிலையில், நாளை முதல் வரும் 08ம் தேதி வரை வைகையாற்றுக்கு வடக்கேயுள்ள பகுதிகளில்  விழா கொண்டாடப்படுவதால், மதுரை மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மக்களை தேடி மேயர்: 'ஸ்மார் சிட்டியில் ஊழல்... உப்பு தின்னவன், தண்ணி குடிப்பான்' - அமைச்சர் சேகர்பாபு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News