சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சேலம் அண்ணா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு இந்த மணிமண்டபத்தை இன்று காலை திறந்து வைத்தார். மேலும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு 5 சிற்றுந்துகளின் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவை அனைத்தும் தகர்த்து எறியப்படும். பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குவதற்கு காரணம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களே காரணம். சேலம் ஓமலூர்ச் சாலைக்கு எம்ஜிஆர் சாலை எனப் பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.