சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவரது மரணம் தொடர்பான முழுமையான மருத்துவ அறிக்கையையும் எந்தத்தரப்பிலிருந்தும், எவ்வித சந்தேகமும் எழாத வகையில் அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நினைப்பது பொதுமக்களின் உரிமையுமாகும். அதனால் தான் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தினார் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் உள்ள பிற கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், ஊடகத்துறையில் சிலரும், நடுநிலையாளர்களும் மறைந்த முதல்வரின் சிகிச்சைக்கும் ஏற்பட்டுள்ள பலத்த சந்தேகங்களையும், மர்மங்களையும்களைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதா மரணத்தில் தனக்கும் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதுடன், சிகிச்சையில் இருந்த முதல்வரை நேரில் பார்க்க, உறவினர்கள் யாரையும் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை, மற்றும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து முழுத் தகவலை ஏன் வெளியிடவில்லை எனக் கேள்விகள் எழுப்பியிருப்பதுடன், தானே இந்த மனுவைத் தொடர்ந்து விசாரிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தால், புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து உடல் கூறாய்வு நடத்த உத்தரவிடுவேன் என தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளிலும், ஊடங்களிலும் வரும் செய்தியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அவர் மரணமடைந்த அதிகாரப்பூர்வத் தகவலைக் கூட மருத்துவமனை நிர்வாகம் தான் முதலில் வெளியிட்டது. அதன் பிறகே, தலைமைச் செயலாளரிடமிருந்து அறிக்கை வந்தது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சிகிச்சை அளித்ததால், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இது குறித்து அளித்துள்ள உறுதி காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கிறேன்.
முன்னாள் முதல்வரின் மரணம் குறித்து உயர்நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும் நீதிபதியைக் கொண்டு முழுஅளவில் விசாரணை நடைபெற்று முழு உண்மைகளையும் மக்களுக்கு வெகு விரைவாகத் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.