33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட மக்கள் மீது கொடிய சுமையை சுமத்த முடியாது: ராமதாஸ்

ஜி.எஸ்.டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் தொழில் வீழ்ச்சியடையும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2022, 11:51 AM IST
  • இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.14.89 லட்சம் கோடி
  • 33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட கொடிய சுமையை சுமத்த முடியாது
  • இந்த உயர்வை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணங்களும் இல்லை
33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட மக்கள் மீது கொடிய சுமையை சுமத்த முடியாது: ராமதாஸ்  title=

ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மாநில அரசுகளின் வருவாய் இழப்பை மத்திய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றும், மத்திய அரசு உத்தேசித்துள்ளவாறு ஜி.எஸ்.டி வரி விகிதம் உயர்த்தப்பட்டால் அது மக்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வுக்கும், தொழில்துறை வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இப்போது 5%, 12%, 18%, 28% ஆகிய அளவுகளில் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப் பட்டு வருகிறது. இந்த வரி விகிதங்களில் 3 மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதுவரை வரிவிலக்குப் பட்டியலில் உள்ள பல பொருட்களுக்கு 3% வரி விதிக்கப்படவுள்ளது; 5% வரி பட்டியலில் உள்ள சில பொருட்களின் மீதான வரி 3% ஆக குறைக்கப்படவுள்ள நிலையில், மீதமுள்ள பொருட்களுக்கான வரி  8% ஆக உயர்த்தப்படவுள்ளது. அதேபோல், 12% வரி நீக்கப்பட்டு, அதில் உள்ள பெரும்பான்மையான பொருட்கள் 18% வரி பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க |  சேவை குறைபாடு : ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாகவும், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேசக் காரணங்களாலும் இந்தியாவின் பணவீக்கம் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.95% என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால், அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விளைவுகளை ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களின் துயரங்கள் உச்சம் தொடும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

வரி விலக்குப் பட்டியலில் உள்ள பொருட்களும், 5% வரி பட்டியலில் உள்ள பொருட்களும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். உதாரணமாக சில்லறை விலை அரிசி, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைக்கு  வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 3% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டாலும், 5% ஜி.எஸ்.டி வரி பட்டியலில் உள்ள சமையல் எண்ணெய், தேயிலை, காபித்தூள், இன்சுலின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள், உரங்கள் ஆகியவற்றின் மீதான வரி 8% ஆக உயர்த்தப்பட்டாலும் அவற்றை வாங்குவதற்கு மக்கள் தங்களின் மற்ற தேவைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். 5% வரிப் பட்டியலில் உள்ள  பொருட்களின் மீதான வரி 3% உயர்த்தப்பட்டால், மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.1.50 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அனைத்து நிலைகளிலும் உயர்த்தப்படும் ஜி.எஸ்.டி வரி காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ. 4 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரை கூடுதல் வருவாய் கொட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி வரி வருவாய் ரூ.14.89 லட்சம் கோடி ஆகும். இது கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மதிப்பை விட 10% அதிகம் ஆகும். அவ்வாறு இருக்கும்போது அதில் 33% அளவுக்கு ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவதை விட மக்கள் மீது கொடிய சுமையை சுமத்த முடியாது. இந்த உயர்வை நியாயப்படுத்துவதற்கு எந்த காரணங்களும் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  ஓடும் பேருந்திலிருந்து அடுத்தடுத்து விழுந்த மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ

ஜி.எஸ்.டி வரி உயர்வால் தொழில்களும் பாதிக்கப்படும். கைத்தறி துணிகள் மற்றும் பட்டுப்புடவைகள் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காட்டிலிருந்து 12% ஆக உயர்த்த அண்மையில் முயற்சி நடந்தது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் கைத்தறி தொழில் சீரழிந்து விடும் என்று எச்சரித்து நடத்தப்பட்ட போராட்டத்தால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இப்போது ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டால் கைத்தறி மற்றும் பட்டுத் துணி தொழில் பாதிக்கப்படும். இதேபோல், மேலும் பல தொழில்களும் ஜி.எஸ்.டி வரி உயர்வால் வீழ்ச்சியடையும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

உலகில் அதிக ஜி.எஸ்.டி வரி விகிதம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளில் 7 விழுக்காடும், கனடா போன்ற சில நாடுகளில் 5 விழுக்காடும் மட்டுமே  ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் சராசரியாக 18% வரி வசூலிக்கப்படுகிறது. பல நாடுகளில் ஒரே அடுக்கு வரி வசூலிக்கப்படும் நிலையில், இந்தியாவில் 5 அடுக்கு ஜி.எஸ்.டி வரி நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகளில் ஜி.எஸ்.டி வரி அறிமுகம்  செய்யப்பட்ட 2 அல்லது 3 ஆண்டுகளில் விலைவாசி குறைந்து வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்தியாவில்  ஜி.எஸ்.டி வரி அறிமுகமாகி 5 ஆண்டுகள் நிறைவடையும் போதிலும் விலைவாசி உயர்வு நிற்கவில்லை என்று கூறியுள்ளார். 

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுகளின் வருவாய் இழப்பை மத்திய அரசே இன்னும் இரு ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க |  பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

 

 

Trending News