சென்னை: வடகிழக்கு பருவமழையால் இந்த முறை தமிழகத்திற்கு போதுமான அளவு மழை கிடைத்துள்ளது என ஒருபுறம் நிம்மதியடைந்தாலும், ஒரேயடியாக கொட்டித் தீர்க்கும் மழை மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கியிருக்கிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்வி நிலையக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் பலருக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பையும் நிறுவனங்கள் கொடுத்துள்ளன என்னும் நிலையில், அரசு மற்றும் காவல்துறையின் சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.
தற்போது பெய்துவரும் இந்த மழை, வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் அண்மை நிகழ்வாக திருமணமான தம்பதிகள் மீட்கப்பட்ட சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.
டி நகரில், இன்று பிரபு - முத்துலட்சுமி ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அனைவரும் திருமண மண்டபத்துக்குள் செல்லும்போது வெள்ளம் இல்லை. ஆனால், பின்னர் திருமண மண்டபத்தை சூழ்ந்த வெள்ளத்தால் மணமக்கள் உட்பட அனைவரும் வெளியே வரமுடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புத்துறை, குறிப்பிட்ட திருமண மண்டபத்திற்கு சென்று மணமக்களையும், குடும்பத்தினர் உட்பட அனைவரையும் படகுகள் மூலமாக வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தை, திருமணத்தில் கலந்துக் கொண்ட யாரும் மறந்துவிட முடியுமா? அதேபோல, வேளச்சேரி பகுதியில் AGS காலனியில் ஜெயந்தி என்ற நிறைமாத கர்ப்பிணி மழை வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இதுகுறித்து தகவலயறிந்த வேளச்சேரி காவல்துறையினர் படகு மூலம் ஜெயந்தி உட்பட குடும்பத்தினர் நால்வரை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல, சென்னை குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்து சுமார் 3 அடி வரை தேங்கியது. தகவல் அறிந்த அதிகாரிகள் மருத்துவமனையில் இருந்த உள்நோளிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரையும் மாற்று இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.
வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது. அரசு நிவாரண முகாமில் இருக்கும் கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த லட்சுமணன் , இந்திரா தம்பதியினரின் பெண் குழந்தை மோனிகாவிற்கு நேற்று முதல் பிறந்தநாள். ஆனால், பிறந்தநாளை கொண்டாட முடியாமல் குடும்பத்தினர் வருத்தப்பட்டதை அறிந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், குழந்தை மோனிகாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையில் டி.பி.சத்திரம் அருகே அண்ணாநகர் பகுதியில் மரம் விழுந்ததில் சிக்கி மயங்கி கிடந்த நபரை, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் மீட்ட நிகழ்ச்சியும் நெகிழ்ச்சியளிக்கிறது. பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மயங்கிக் கிடந்தவரை தோளில் சுமந்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார், அரசுத்துறையினர் மற்றும் களப்பணியாளர்களின் அர்பணிப்பை காட்டும் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியாகி, காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம், உண்மை தான் என்று உணர்த்துகிறது.
READ ALSO | கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR