தமிழக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்பு மண்டல மசோதா இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்தது. 45 கிராமங்களில் 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய ரசாயன பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைக்க 2017-ல் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த அறிவிப்பால் கடலூர், நாகை மாவட்டங்கள் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என, சூழலியல் அமைப்புகள் எச்சரித்தன. இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற தமிழக அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. அதோடு நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்தும் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீட்டு வசதி ஊரக மேம்பாட்டுத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கை வருமாறு:-
நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில், “பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம்” அமைப்பதற்கு தமிழ்நாடு நகர மற்றும் திட்ட சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என டெல்டா பாசன பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோலியம்- ரசாயன மண்டலம் அமைக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
கடலூர், நாகை மாவட்ட கலெக்டர்கள் இந்த அனுமதி ரத்து நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை அரசுக்கு தெரிவிக்கவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.