தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., தமிழ்நாட்டில் மின்கல வாகனங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் மின்கல வாகனங்கள் கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மின்கல வாகனங்கள் கொள்கையில் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கு மிகப்பெரிய சந்தை இருக்கும் நிலையில், அதை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் தமிழகத்தில் மின்கல வாகன உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்; அதற்கான கொள்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் தான் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மின்கல வாகனங்கள் கொள்கை-2019ஐ தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; மின்கல வாகனங்கள், மின்னேற்றும் கருவிகள், மின்கலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கத் தேவைப்படும் நிலத்தின் விலையில் 20% வரை மானியம் வழங்கப்படும்; தென்மாவட்டங்களில் நில மதிப்பில் 50% வரை மானியம் வழங்கப்படும்; பத்திரப் பதிவின் போது முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்படும்; வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பணியாளர்களுக்காக செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி மானியமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சலுகைகள் அக்கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மின்கல வாகனங்களுக்கான மிகப்பெரிய சந்தையை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்தக் கொள்கை பெரிதும் உதவும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நில மதிப்பில் 50% மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களின் மின்கல வாகன தயாரிப்பு ஆலைகள் அமைவதற்கும், வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்களில் மின்னேற்றும் வசதி செய்யப்பட வேண்டும்; அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் இத்தகைய வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்பது போன்ற அம்சங்களும் சாதகமான பயன்களை ஏற்படுத்தும். வாகனங்களுக்கு சாலைவரி மற்றும் பதிவுக் கட்டணங்கள் முழுமையாக விலக்கு ஆகியவையும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழக அரசின் இந்த திட்டங்கள் பாராட்டத்தக்கவையாகும்.
ஆனால், இவை மட்டுமே மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையில் தமிழகம் முதலிடத்தை பிடிப்பதற்கு உதவாது. மின்கல வாகனங்களின் விலைகள் சாதாரண வாகனங்களின் விலைகளை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குவதன் மூலமாக மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். ஆனால், மின்கல வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகைகள் எதுவும் கொள்கையில் இடம்பெறவில்லை. சாலைவரி & பதிவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றால் கிடைக்கும் பணப்பயன்கள் குறைவு என்பதால் அவை வாடிக்கையாளர்களை ஈர்க்காது.
மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் மக்களை எளிதில் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric Vehicles - FAME) திட்டத்தின்படி ஒரு கிலோ வாட் மின்கல திறன் கொண்ட இரு சக்கர ஊர்திக்கு ரூ.10,000 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால், மின்கலனை தேவைக்கு ஏற்ற வகையில் மாற்ற கூடுதலாக ரூ.20,000 செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், ரூ.10,000 மானியம் எந்த வகையிலும் பயனளிக்காது. மாநில அரசுகளும் மானியம் வழங்கினால் மட்டுமே மின்கல வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்ற நிலையில், அதை உணர்ந்து கொண்ட தில்லி அரசு 15% முதல் 20% வரை கூடுதல் மானியம் வழங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மின்கல வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை பொறுத்தவரையில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்கள், மாராட்டியம், குஜராத், தில்லி ஆகிய 7 மாநிலங்களிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. எந்த மாநிலத்தில் அதிக வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு, அதிகளவில் வாகனங்கள் விற்பனையாக வாய்ப்புகள் உள்ளனவோ, அங்கு தான் முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வரும். முதலீட்டை ஈர்க்க தென் மாநிலங்களிடையே கடும் போட்டி நிலவும் சூழலில், விற்பனையை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வந்தால் தமிழகத்தில் முதலீடுகள் குவியும் வாய்ப்புள்ளது. எனவே, மின்கல வாகனங்கள் விலையை குறைக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு சில மானியச் சலுகைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.