மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி அனைவருக்கும் கிடைக்க பா.ம.க.வினர் உதவ வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில் உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், பல இடங்களில் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உழவர்களுக்கும், ஏழைகளுக்கும் குறைந்தபட்ச மாத வருமானம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்த நிலையில், சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் முதல்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 உழவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அதேபோல், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதம் ரூ.2500 வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தியிருந்த நிலையில், ஒருமுறை உதவியாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இத்தகைய நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைய வேண்டியது மிகவும் முக்கியமாகும். இரு திட்டங்களுக்கான பயனாளிகளின் உத்தேசமான பட்டியலை தமிழக அரசு ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறது. ஆனாலும், எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் புதிய பயனாளிகளும் இப்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த விவரங்கள் பல்வேறு வழிகளில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தரப்பினருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், விண்ணப்பங்களை பெற வேண்டிய அதிகாரிகள் வேறு பணிகள் காரணமாக அலுவலகத்திற்கு வெளியில் சென்று விடுவதாலும் ஏராளமான பயனாளிகளின் விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ரூ.2,000 நிதி உதவி பெற கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், புகைப்படங்கள், நியாயவிலைக் கடைகள், சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். அதேபோல், மாநில அரசு சார்பில் ஒரு முறை மட்டும் வழங்கப்பட உள்ள ரூ.2000 நிதி உதவி பெற விண்ணப்பப்படிவம் எதுவும் தாக்கல் செய்யத் தேவையில்லை. மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினால் போதுமானதாகும்.
இந்த விவரங்கள் தெரியாததால் பலர் மத்திய, மாநில அரசின் நிதியுதவி பெறுவதற்காக தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், உழவர்களும் பயனடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட மத்திய, மாநில அரசின் நிதியுதவி திட்டங்களின் பயன்கள் தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
அதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாராத் தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா? என்பதை விசாரிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத ஏழைகள் மற்றும் உழவர்களுக்கு இத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆவணங்களைத் திரட்டி அவர்களின் பெயர்களை பதிவு செய்யவும் உதவ வேண்டும்.
இந்தத் திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி வரும் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், உழவர்களும் 100% இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான இத்திட்டங்களின் பயன்களை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து பா.ம.க. நிர்வாகிகள் செயல்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.