முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், காலமான மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
’’மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து இங்கே எழுப்பப்பட்டிருக்கக்கூடிய கேள்விக்கு, ஒரு நல்ல விளக்கத்தை நான் அளிக்க விரும்புகிறேன்.
ஊரகப் பகுதிகளில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், கிராம பொதுச் சொத்துக்களைப் பேணிக் காத்திடல், சிறு சேமிப்புத் திட்டத்திற்கு உதவுதல் போன்ற கிராம அளவிலான பல்வேறு பணிகளுக்காக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் 2-9-1989-ல், ஒரு ஊராட்சிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையிலே, மொத்தம் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளுக்கு 25 ஆயிரத்து 234 மக்கள் நலப் பணியாளர்கள் அப்போது நியமனம் செய்யப்பட்டார்கள்.
13.07.1991-ல் இப்பணியிடங்கள் அன்றைய அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டது. உங்களுடைய அதிமுக ஆட்சியில்தான் ரத்து செய்தீர்கள். மீண்டும் கழக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு, மீண்டும் இப்பணியிடங்கள் 24-2-1997 அன்று தோற்றுவிக்கப்பட்டன. பின்னர் அமைந்த அதிமுக அரசால் 1-6-2001 அன்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது. 12.6.2006-ல் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மீண்டும் இப்பணியிடங்களைத் தோற்றுவித்து, ஊராட்சிக்கு ஒருவர் என 12 ஆயிரத்து 618 மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் படிக்க | தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதாக பாஜக நிர்வாகி கைது
இறுதியாக 8-11-2011-லும் அன்றைய அதிமுக அரசால் இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்பொழுதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரத்து செய்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதுதான் மாறி, மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனுடைய தொடர்ச்சியாக, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக மேல்முறையீட்டு வழக்குகளில் 19-8-2014 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீளப் பணி வழங்க வேண்டுமென்ற அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 19-8-2014 நாளிட்ட உத்தரவில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டு அளித்த தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை (Interim stay) விதித்தது.
11-8-2017 அன்று மேற்படி சிறப்பு விடுப்பு மனுக்கள் Civil Appeal-ஆக மாறுதல் செய்யப்பட்டு, கடைசியாக 28-2-2022 அன்று விசாரணைக்கு வரப்பெற்று தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக அவர்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பின்னர், நிலுவையில் உள்ள வழக்கில், தீர்ப்பிற்கு உட்பட்டு நீதிமன்ற ஆணைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில், பின்வரும் முடிவுகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ளன:
மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்” என்ற பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, இப்பணி வாய்ப்பு வழங்கப்படும்.
இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பூதியத்தினை ரூ.3,000/-லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தியும், மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்கெனவே கிராம ஊராட்சிப் பணிகளில் பணியாற்றியதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கிராம ஊராட்சிப் பணிகளைக் கூடுதலாக கவனிக்க வாய்ப்பளித்து, அதற்கென மாநில நிதிக் குழு மானியத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்கவும், இதன்படி இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக ரூ.7,500/- வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுக் காலத்தில், காலமான மக்கள் நலப் பணியாளர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு, அவர்கள் விரும்பினால், அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G