கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம், திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!
சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 3000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்.... பள்ளிகள், அங்கன்வாடிகள் தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஊடகங்கள் சரியான தகவலை வெளியிடும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தேனியிலும் மருத்துவ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றார். கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம், திருச்சி, கோவை ஆகிய 4 இடங்களில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன என அவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறினார்.