சென்னை: கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து சுபஸ்ரீ (வயது 23) என்ற இளம் பெண் மீது விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பேனர் விவகாரத்தில் தமிழக அதிமுக அரசுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் கருணை தொகை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிமுக கவுன்சிலர் சி.ஜெயகோபால் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னை நகர போலீசாரால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனர் சரிந்து உயிர் இழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசசாயி ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகள் மெத்தனமே காரணம். அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக தமிழக அரசு நினைக்கிறதா? என கேள்வியும் எழுப்பினார்கள்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும், அது பின்னர் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது என நீதிபதிகள் வேதனை பட்டார்கள். மேலும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. உயிர் இழந்த சுபஸ்ரீ தொடர்பான வழக்கை விசாரித்து அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயது பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதில், நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அதிமுக, திமுக உட்பட பல கட்சிகள் விதிகளை மீறி பேனர் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினர். திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதேபோல அதிமுக சார்பில் விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உத்தரவிட்டனர்.