கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு?

Last Updated : Apr 19, 2017, 08:58 AM IST
கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க முடிவு? title=

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் பிளவு பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிமுக சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தேர்தல் கமிஷன் முடக்கிவைத்து இருக்கும் இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக அதிமுக-வின் இரு அணிகளையும் சேர்ப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது.

அதிமுக அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 

இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் தங்கமணி வீட்டில் பெரும்பாலான அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் பேட்டி அளித்த அமைச்சர்கள் இணைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

நேற்று காலை மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் இரு அணிகளும் இணைவதற்கு பலதரப்பிலும் பேசி வருகிறார்கள் என்றார். 

இதற்கிடையே நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறையில் மூத்த அமைச்சர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர்கள் யாரும் எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் சென்று விட்டனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கூடி ஆலோசித்த நிலையில், நேற்று இரவு அவர்கள் அனைவரும் அடையாறில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றனர். அங்கு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்கள். 

பெரியகுளத்தில் நேற்று பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சில முக்கிய நிபந்தனைகளை விதித்தார். அதாவது, சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து விலக வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை இரவு 9.30 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயலலிதா வழிநடத்திய கட்சியையும், அவரது பொற்கால ஆட்சியையும், வருகிற 4 வருடங்கள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமும் தமிழகத்தில் தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநில- மாவட்ட நிர்வாகிகள் என அனைவருமே கூடி, ஒருமித்த ஒரு ஒட்டுமொத்த கருத்தை முடிவு செய்திருக்கிறோம்.

அது என்னவென்றால் கட்சியின் 1½ கோடி தொண்டர்களின் விருப்பமும், தமிழக மக்களின் விருப்பமும் கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இல்லாமல், நேரிடையாக சொல்லவேண்டும் என்றால் டி.டி.வி.தினகரனை சார்ந்த குடும்பத்தை முழுமையான அளவு ஒதுக்கிவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துங்கள் என்பது தான் ஒட்டுமொத்த தொண்டர்களின், தமிழக மக்களின் விருப்பம். இதுதான் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் விருப்பமும்கூட.

அந்த விருப்பத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்னவென்றால் கட்சியிலும், ஆட்சியிலும் இனி டி.டி.வி.தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, அவர்களின் தலையீடு எள்ளளவும் இல்லாமல் முழுமையாக ஒதுக்கிவிட்டு கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவோம் என்கிற அளவுக்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை முடிவாக நாட்டு மக்களுக்கும், கட்சி சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அந்த விருப்பம் இன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த இயக்கத்தை ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டினார். இந்நிலையை பொறுத்தவரை கட்சியை வழிநடத்துவதற்கு, காப்பாற்றுவதற்கு ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறினார். நாங்களும் தயார் என்று கூறினோம். நாளைக்கே அவர் வந்தால் கூட பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரது கருத்தை வரவேற்கிறோம் என்று இன்றைக்கு சொல்கிறோம், என்றைக்கும் சொல்வோம். ஒற்றுமையாக இருக்கவே, அந்த ஒற்றுமையுடனே கட்சியை கொண்டு செல்ல விரும்புகிறோம். அந்த ஒற்றுமையுடன் இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை. விருப்பம் எல்லாமே. அதில் எந்த வித மாறுபாடும் கிடையாது. நாளைக்கே அவருடன் பேச தயார்.

ஆனால் இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவு என்பது அடிமட்ட தொண்டனின் ஒரு உணர்வு. அந்த உணர்வுக்கு மதிப்பளித்து நாங்கள் விவாதம் செய்து இனி எந்த சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டு, முழுமையான ஆட்சியை வழிநடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News