தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக வலுத்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது தங்கள் தேர்தல் அறிக்கையில் அதிமுக படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது..
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக 6-வது முறை பொறுப்பேற்ற ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக 1,000 டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளில் தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 6,800 ஆக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை, தற்போது 6,300 ஆக குறைந்துள்ளது. தற்போது 1,000 கடைகள் மூடப்பட்டால், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறையும்.