பணம் பத்தும் செய்யும் என்பது ஒருபுறம் இருக்கட்டும் ; முதலில் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லுமா ? செல்லாதா ? என்ற கேள்விகளின் பதிலாக, ‘செல்லும்’ என்று ரிசர்வ் வங்கியே சொன்னாலும் இன்னும் அதன் குழப்பம் மட்டும் தீர்ந்தபாடில்லை. தாள்களின் வடிவத்தில் இருந்த 10 ரூபாய் தாள்கள் 2005ம் ஆண்டு வாக்கில்தான் முதன்முறையாக பத்து ரூபாய் நாணயங்களாக அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஆண்டில் இருந்து மக்களிடம் போதிய அளவில் 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து, அதன் வடிவத்தை மாற்றிப் பார்த்தனர். பின்பு, 2009 மற்றும் 2011ம் ஆண்டில் மீண்டும் மீண்டும் 10 ரூபாய் நாணயத்தின் வடிவமைப்பை மாற்றிப் பார்த்தனர். கிட்டத்தட்ட, 14 வடிவங்களில் இந்த 10 ரூபாய் நாணயங்கள் மாற்றப்பட்டு, வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.
மேலும் படிக்க | ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!
இத்தனைத் தூரம் கடந்து வந்தாலும், 10 ரூபாய் தாளுக்கு இருக்கும் மரியாதையும் புழுக்கத்தின் செல்வாக்கும் 10 ரூபாய் நாணயத்துக்கு இல்லை என்பதே யதார்த்தம். முதலில் சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களிலேயே அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் 10 ரூபாய் நாணயங்கள் எடுபடவில்லை. அரசுப் பேருந்தில் நடத்துநர்கூட பத்து ரூபாய் சில்லறையை வாங்க மறுத்த கதைகளும், சர்ச்சைகளும், புகார்களும் உண்டு. பரவலாக மக்களிடையே, இதன் புழக்கத்தை அதிகப்படுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் மீண்டும் மீண்டும் 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தின.
ஒருகட்டத்தில், பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு சென்றன. எனவே, மக்கள் அனைவரும் தாராளமாக 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மெல்ல மெல்ல அதன் புழக்கம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பரவத் தொடங்கியது. ஆனால், சென்னையைத் தாண்டி இப்போதும் கிராமப் புறங்களில் 10 ரூபாய் நாணயங்களுக்குச் செல்வாக்கு இல்லை என்பதே யதார்த்தம்.
கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் 10 ரூபாய் நோட்டை வாங்காத கடைக்காரர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். பெருநகர பயன்பாட்டைத் தாண்டி 10 ரூபாய் நாணயத்தின் புழக்கத்தை கிராமத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசெல்லும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தருமபுரியில் தனி நபர் ஒருவர் விழிப்புணர்வுக்காக செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல், நாட்டு வைத்தியம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தங்கள் பகுதியில் 10 ரூபாய் நாணயங்களை வைத்து சிறுவர்கள் சிலர் விளையாடியதைப் பார்த்து வெற்றிவேல் வேதனை அடைந்துள்ளார்.
மேலும் படிக்க | சாலையில் கிடந்த கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தும் வெள்ளை காகிதம்!
செல்லாத காசைப் போல அவர்கள் 10 ரூபாய் நாணயங்களை அணுகியது வெற்றிவேலை யோசிக்க வைத்துள்ளது. அந்த யோசனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என பரவலாக பேசப்பட்டு வருவதை மாற்றி, அனைவரும் அந்த நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் நோக்கத்தில் 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க ஆரம்பித்தார் வெற்றிவேல். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல் சிறுகச் சிறுகச்சேர்த்த 10 ரூபாய் நாணயங்கள் மலைபோல் வீட்டில் குவியத் தொடங்கின.
அதைவைத்து என்ன வாங்கலாம் என்று யோசித்த வெற்றிவேலுக்கு பட்டென உதித்தது கார் வாங்கும் ஐடியா. கார் வாங்கும் திட்டத்தோடு மேலும் 10 ரூபாய் நாணயங்களை சேகரிக்க ஆரம்பித்தார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றார். கோவில், வணிக வளாகம், சாலையோரக் கடைகள் என பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தைச் சேகரித்துள்ளார். மூட்டை மூட்டையாக நாணயங்கள் சேர்ந்த பின்னர், அந்த நாளும் வந்தது.!
சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு வந்த வெற்றிவேல், தான் சேர்த்து வைத்த 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து கார் வாங்க விரும்புவதாக கார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கார் நிறுவனத்துக்கு சரக்கு வாகனம் வந்திறங்கியது. அதில் இருந்து மூட்டை மூட்டையாக 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு வந்து கார் நிறுவனத்திடம் கொட்டிக் காண்பித்தனர்.
சொகுசு காரின் விலையான 6 லட்ச ரூபாய் பணத்தையும் 10 ரூபாய் நாணயங்களாகவே வெற்றிவேல் கார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளார். அத்தனை நாணயங்களையும் கார் நிறுவன அதிகாரிகள் எண்ணிப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் படிக்க | வாழ்க்கையில நாமளும் கோடீஸ்வரன் ஆகலாம். இந்த சுலபமான வழியை பின்பற்றுங்க..
இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட காருக்கான சாவியை கார் நிறுவன அதிகாரிகள் வெற்றிவேலுக்கு வழங்கினர். 10 ரூபாய் நாணயம் செல்லும் என்பதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதாக வெற்றிவேல் பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். சிறுக சிறுக சேமித்த பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்துக் கார் வாங்கி, குடும்பத்துடன் வெற்றிவேல் ஊருக்குப் புறப்பட்டார். அவரது இந்த முயற்சி பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது!.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR