கடந்த செப்டம்பர் மாதத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாணவி சோபியா கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
மாணவி சோபியா தரப்பில், தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை மிரட்டியதால், பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில், தமிழிசை சவுந்தர ராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் அறிக்கையை அடுத்த மாதம் நவம்பர் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தூத்துக்குடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.