திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காக்கு சென்று கொண்டிருந்தது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில். ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர், கும்மிடிப்பூண்டி வழியாக சென்று கொண்டிருந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. முன்னாள் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியதால், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. மற்ற பெட்டிகள் எல்லாம் தடம்புரண்டன. ரயிலில் இருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகளும் விபத்தில் சிக்கிய நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முன் பெட்டிக்கு அருகில் இருந்த பெட்டியில் இருந்தவர்கள் மட்டும் படுகாயமடைந்தனர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற பயணிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்து பத்திரமாக மீட்க்கப்பட்டு, மாற்று ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் தெற்கு ரயில்வே துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மற்ற பயணிகள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். திருவள்ளூர் மற்றும் சென்னையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | திருச்சி: நடுவானில் தத்தளித்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விபத்து நடந்தவுடன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரயில் விபத்து நடந்த பகுதியில் இருந்து அனைத்து ரயில் பயணிகளும் ஒருசில மணி நேரங்களில் மீட்கப்பட்டனர். இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
விபத்து நடந்தது எப்படி?
பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. ஒடிசாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்துக்கும் தவறான சிக்னல் அளிக்கப்பட்டிருந்தது. அதைப்போலவே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் தவறான சிக்னல் கொடுத்ததால் சரக்கு ரயில் நின்ற இருப்பு பாதையில் பயணித்துள்ளது. இதனால், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சுமார் 100 கிமீ வேகத்தில் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தை தொடர்ந்து அந்த பாதையில் தற்காலிகமாக ரயில்கள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து தெற்கு ரயில்வே விசாரணையை தொடங்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ