வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்ததைக் கண்டித்து, சென்னை மலேசிய தூதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக கழகம் கூறியுள்ளது.
இதைக்குறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறியதாவது:-
மதிமுக கழகப் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கெடுத்துக் கொள்வதற்காக சென்னையில் உள்ள மலேசியா தூதரகத்தில் கடவுச்சீட்டு வாங்கி, அனுமதிபெற்று நேற்று இரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
அவரை கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசிய தூதரக அதிகாரிகள், “நீங்கள் மலேசியாவுக்குள் வரக்கூடாது, நீங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்,” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, பினாங்கு முதல்வர் லிம் குவான் யங் ஆகியோர் கூறியும் தடுத்து நிறுத்தியது கண்டனத்துக்கு உரியது.
இந்த செயலைக் கண்டித்து சென்னை - தேனாம்பேட்டை, எல்.ஆர்.சாமி கட்டடம் அருகே, செனடாப் சாலையில் உள்ள மலேசிய தூதரகத்தின் முன்பாக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்கள் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் சுமர்ர் 3.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.