2026 கூட்டணி மாறுமா? விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த “நச்” விளக்கம்

Thol. Thirumavalavan Statement: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த முக்கிய அப்டேட்

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 11, 2024, 01:31 PM IST
  • கட்சி அரசியல் என்பது வேறு, சமூகம் சார்ந்த மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் என்பது வேறு.
  • மது ஒழிப்பு மாநாட்டையும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் முடிச்சு போட தேவையில்லை.
  • மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 நடைபெறுகிறது.
2026 கூட்டணி மாறுமா? விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த “நச்” விளக்கம் title=

Latest Tamil Nadu News: விழுப்புரத்தில் இமானுவேல் சேகரன் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மது ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் இணைய வேண்டும் எனக் கூறியதோடு, அதிமுக கூட எங்கள் மது ஒழிப்பு மாநாட்டில் இணையலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆளும் அரசுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாடு நடத்துவது மட்டுமில்லாமல், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே செய்தியாளர்கள் மத்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், அரசியல் வேறு, மக்கள் பணி வேறு எனத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியது.. 

மது ஒழிப்பு கோரிக்கையை மாநாடாக நாங்கள் நடத்துகிறோம். அதில் லட்சக்கணக்கான மகளிரை ஒருங்கிணைக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மகளிர் மட்டுமின்றி ஜனநாயக சக்திகளாக உள்ள அனைவரும் கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் கட்சி வரம்புகளை கடந்து அனைத்து வரம்புகளையும் கடந்து அனைவரும் ஒரே குரலில் ஒருமித்த குரலில் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இது எங்களுடைய அறைகூவல்.

கட்சி அரசியல் என்பது வேறு, சமூகம் சார்ந்த மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் என்பது வேறு. 24 மணி நேரமும் கட்சி சார்ந்தே நாம் நிலைப்பாடுகள் எடுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நிலைப்பாடு. அவ்வளவுதான், மற்ற நேரங்களில் நாம் மக்கள் நலன் சார்ந்து தான் எல்லோரோடும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. 

மேலும் படிக்க - திருமா கிட்ட இத எதிர்பார்க்கல..!! கூட்டணியில் தானே இருக்கீங்க..!!

தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டாம் என்று எந்த குரலும் இல்லை. மதுவை ஒழிப்போம் என்றுதான் எல்லா கட்சிகளும் எல்லா கட்சித் தலைவர்களும் சொல்லுகிறார்கள். எல்லோரும் ஒருமித்து ஒர நிலைப்பாட்டில் இருக்கிறபோது. மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல். 

திமுகவுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று என்பதுதான் கருத்து. அண்ணா திமுகவுக்கும் மதுவிளக்கில் உடன்பாடு உண்டு. இடதுசாரிகளுக்கும் அதே நிலைப்பாடுதான். விடுதலைச் சிறுத்தைகளும் அதைத்தான் பேசுகிறோம். 

தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளுமே மதுவிலக்கில் உடன்பாடாக இருக்கிறபோது அரசு மதுபானக் கடைகளை படுஜோராக நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது. அதை ஏன் படிப்படியாக குறைக்கக் கூடாது. அதை ஏன் முற்றாக நாம் ஒழிக்கக்கூடாது. பிற மாநிலங்களுக்கு நாம் ஏன் முன்னோடியாக இருக்கக்கூடாது. 

மற்ற மாநிலங்களில் எல்லாம் மதுபானம் வியாபாரம் செய்யப்படுகிறது என்ற காரணத்தை நாம் சொல்லத் தேவையில்லை. நாம் பிறருக்கு முன்னோடியாக இருக்கலாம். 

இன்றைக்கு பீகாரிலே மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது. குஜராத்திலே மதுவிளக்கு நடைமுறையில் இருக்கிறது என்கிறபோது ஏன் தமிழ்நாட்டிலே அதை நடைமுறைப்படுத்த முடியாது. 

மாநில சுயாட்சிக்கு முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமையோடு சொல்லுகிறோம். மொழி உரிமை போராட்டத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது என்று பெருமையோடு சொல்லுகிறோம். நடவர் ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய மாநிலங்களில் முதன்மையாக இருப்பது தமிழ்நாடு என்று பெருமையாக சொல்லுகிறோம். இந்தி திணிப்பை, நீட் எதிர்ப்பை எதிர்ப்பதிலே தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது என்று சொல்லுகிறோம். 

இப்படி எல்லாவற்றிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக ஏன் இருக்கக்கூடாது என்ற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுப்புகிறது.

மேலும் படிக்க - திருமா உஷாராகிவிட்டார்... 'திமுக மீது நம்பிக்கையே இல்லை' - பற்ற வைத்த தமிழிசை

அந்த அடிப்படையில் தான் இந்த கோரிக்கையை நாம் முன்வைக்கிறோம். அதனால் இந்த மாநாட்டையும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் முடிச்சு போட தேவையில்லை. அது வேறு இது வேறு. 

மது ஒழிப்பதில் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுப்பது, ஒரு தூய நோக்கத்திற்காகத்தான். இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. 

எல்லோரும் எல்லாவற்றையும் அரசியலோடு இணைத்துப் பார்ப்பது, தேர்தலோடு இணைத்துப் பார்ப்பது, கூட்டணி கணக்குகளோடு இணைத்துப் பார்ப்பது என்று இதை அணுகுகிறார்கள். 

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பார்க்கும். இந்த நேரம் நாங்கள் அதை ஒரு கருப்பொருளாக வைத்துக்கொண்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. 

இந்த குரலுக்கு எல்லோரும் ஆதரவு நல்க வேண்டும். ஆட்சியில் இருக்கிற திமுக இதை கனிவோடு பரிசீலிக்க வேண்டும், ஆழமாக பரிசீலிக்க வேண்டும், தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். 

2016 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவோம் என்கிற வாக்குறுதியை தந்திருக்கிறது. அதை நினைவூட்டுகிறோம்.

இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.

மேலும் படிக்க - பருவமழை எதிர்கொள்ள என்னென்ன நடவடிக்கைகள்.. மேயர் பிரியா கொடுத்த அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News