தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது!
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..!
அப்போது அவர் கூறும்போது, தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இயல்பை விட கோடை மழை 12 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.
மழை காரணமாக வெப்பநிலை மிதமாக தொடர்கிறது என்று தெரிவித்தார். மேலும் அதிகபட்சமாக கொடைக்கானலில் 11 செ. மீ., வால்பாறையில் 10 செ. மீ. மழை பெய்துள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான கோடை மழையின் அளவு 93 மில்லி மீட்டர். இதே காலக்கட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையின் அளவு 81 மில்லி மீட்டர். எனவே இந்த ஆண்டு கோடை மழை இயல்வை விட அதிகமாகப் பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக தென்னிந்திய பகுதிகளில் பெய்து வரும் கோடை மழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்ப அளவானது குறிப்பிடத்தக்க அளவில் உயராமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
அதே போல கோடை மழை காரணமாக வெப்ப அளவானது இயல்பான அளவை விட குறையும் என்றும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.