சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் சீனாவின் இறப்பு எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது, மேலும் மொத்த பத்திப்பு எண்ணிக்கை 20,438 ஆக உள்ளது. அதேசமயம் இந்த வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றவர்களில் பலரும் உடல்நலம் தேறி வீடு திரும்பி வருகின்றனர். அப்படி இதுவரை 475 பேர் சிகிச்சை முடிந்து சென்றிருப்பதாகவும் சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதில் 1000 படுக்கைகள் கொண்ட முதல் மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது.
ஹுவோஷென்ஷான் என பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனை பல்துறை பணியாளர்கள் கொண்ட 7 ஆயிரம் பேர் அடங்கிய மிகப்பெரும் குழு மூலம் கடந்த 10 நாட்களாக 24 மணி நேரமும் பணியாற்றி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து சிறந்த தொழில்நுட்ப வசதிகள் அமைக்கபட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் தற்போது நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவமனையை தொடர்ந்து 1500 படுக்கைகள் கொண்ட மற்றொரு மருத்துவமனையும் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது.