பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு!
வருங்கால வைப்பு நிதியின் வட்டியை உயர்த்தி மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் அறிவித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 0.10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் அடைவார்கள் என சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
2018-19 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஏற்கெனவே கூறியிருந்தது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு ஆண்டுதோறும் எவ்வளவு வட்டி வழங்குவது என்பதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை முடிவு செய்கின்றன.
கடந்த 2017-18 நிதி ஆண்டில் 8.55 சதவிகித வட்டி மட்டுமே வழங்கப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைவான வட்டிவிகிதம். இந்த ஆண்டு இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ள சுமார் 6 கோடி தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 2018-19 நிதி ஆண்டுக்கு இந்த வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசிக்க, கடந்த பிப்ரவரி மாதம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் EPFO அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின் 2018-19 நிதி ஆண்டுக்கான வட்டியை 8.65 சதவீதம் ஆக உயர்ந்த பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் PF வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.