“உழைப்பே உயர்வு”, “உழைப்போர் ஒற்றுமை" மே தின வாழ்த்து கூறிய ஸ்டாலின்

மே தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மே தினப்பூங்கா நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 1, 2018, 02:19 PM IST
“உழைப்பே உயர்வு”, “உழைப்போர் ஒற்றுமை" மே தின வாழ்த்து கூறிய ஸ்டாலின் title=

மே தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மே தினப்பூங்கா நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-
 
இன்று (01-05-2018) மே தினத்தை முன்னிட்டு சென்னை, சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தினப்பூங்காவில் நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளர்களின் பெருமையை உலகெங்கும் உணர்த்திடும் திருநாளே மே தினம்.

எட்டு மணிநேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் என்ற மிக முக்கியமான கோரிக்கைகள் சட்டபூர்வமாக உலக அரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறு படைத்த நாள் மே-1 ஆம் தேதி என்பது உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்திற்குக் கிடைத்த உன்னதமான வெற்றியாக இன்றைக்கும் அமைந்துள்ளது.

ஓவர் நைட்டில் டிரெண்ட் ஆன மு.க.ஸ்டாலின்! கலாக்கும் நெடிசங்கள்

இந்த மே நன்னாளில் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் உழைக்கும் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் நிறைந்த மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளிப் பெருமக்களின் உற்ற தோழனாகத் திகழும் திராவிட பேரியக்கத்தின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை ஆர்வத்தோடு நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபட்டது என்பதை தொழிலாளர் சமுதாயம் நன்கு உணரும்.

காகித பூக்கள் ஒருபோதும் மணக்காது: கூறிய ஸ்டாலின்! எதற்கு தெரியுமா?

பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் தொழிலாளர் நலக்கொள்கைகளில் இருந்து எந்தநிலையிலும் சமாதானம் எதுவும் செய்து கொள்ளாமலும், கிஞ்சிற்றும் விலகிச் செல்லாமலும் உரிமைகளைப் போற்றியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடியிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கான உரிமைகளைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி இருக்கிறார்கள்.

மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை; தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை; நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாயக் கூலிகளாகவும், வேறுபல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை, எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; உழைப்பாளிகளின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; குடிசைகளில்லா கிராமங்கள், குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகம் காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்; அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் என பல்வேறு முத்தான திட்டங்களை தொழிலாளர்களுக்காக நிறைவேற்றியது தி.மு.க ஆட்சிதான்.

அன்னை தமிழை அவமானபடுத்தும் மத்திய அரசு -ஸ்டாலின்!

தாராளமயக் கொள்கைகள் தங்குதடையின்றி நாட்டில் நுழைந்த நேரங்களில் கூட, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோய் விடாமல் பாதுகாத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் செலுத்தியதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, “உழைப்பே உயர்வு”, “உழைப்போர் ஒற்றுமை", என்ற உயர்ந்த சிந்தனைகளுடன் நாள்தோறும் உழைத்திடும் ஏழை, எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம்பெற வேண்டும் - வளம் பெற வேண்டும் - அப்போதுதான் நாடும், நாட்டின் பொருளாதரமும் முன்னேறும் என்பதனைச் சுட்டிக்காட்டி, மீண்டும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக என்றைக்கும் முன்னனியில் நின்று, இறுதிவரை போராடும் என்ற உறுதியை தொழிலாளர் சமுதாயத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Trending News