தமிழக கல்விக்கொள்கை: புதிதாக அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்?- எழுத்தாளர் விழியன் பகிர்வு

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை  வடிவமைக்க அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும் என்பது குறித்து எழுத்தாளர் விழியன் பகிர்ந்துள்ளார். 

Written by - K.Nagappan | Last Updated : Apr 7, 2022, 06:16 PM IST
  • மாநிலத்திற்கான கல்விக்கொள்கை என்பது பல மாநிலங்களைச் சிந்திக்க வைக்கும்
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்பாடு
  • வருங்கால சந்ததியினருக்கு இது பெரிதும் வலுசேர்க்கும்
தமிழக கல்விக்கொள்கை: புதிதாக அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்?- எழுத்தாளர் விழியன் பகிர்வு  title=

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை  வடிவமைக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் த.முருகேசன்  தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி, இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இக்குழு என்ன செய்யும் என்பது குறித்து எழுத்தாளர் விழியன் பேசியதாவது: 

''தேசிய கல்விக்கொள்கை 2020வை வலுவாக எதிர்த்த தமிழகம் தனக்கான ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. நீண்ட நாள் காத்திருப்பு என்றாலும் இது வரவேற்கும்படியான ஒரு முன்னெடுப்பு. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவும் பன்முகத் தன்மையைக் கொண்டது. பல எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது. இது ஒரு நூதனமான செயல்பாடு. கல்வி இப்போது பொதுப் பட்டியலில் இருக்கும் சமயம், மாநிலத்திற்கான கல்விக்கொள்கை என்பது பல மாநிலங்களைச் சிந்திக்க வைக்கும். 

அனைத்து மாநிலங்களும் தங்களுக்கான கல்விக்கொள்கையை உருவாக்கி அதன்படி செயல்படுத்துவதே ஒட்டுமொத்த இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒரே பாடத்திட்டம், ஒரே மொழி என்ற ஒற்றைக் கோட்பாட்டிற்கு நேரெதிரான அரசியல் செயல்பாடு இது. மேலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதற்கான முன்னேற்பாடு. எமர்ஜென்சி காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றது மீண்டும் திரும்பவே இல்லை. மற்ற மாநிலங்களும் ஓங்கி குரல் கொடுத்தால் திரும்ப மாநிலங்களுக்கே வரும்.

மேலும் படிக்க |  தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க 12 பேர் கொண்ட குழு அமைப்பு

குழு என்ன செய்யும்? 

மாநிலத்திற்கு என்று, அடுத்த 10-15 ஆண்டுகளில் தமிழகத்தின் கல்வி எவ்வாறு இருக்கவேண்டும், மழலைக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரி, ஆய்வு வரையில் எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கும். அனைவரையும் எப்படி உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறும். கையில் இருக்கும் குழந்தைகளைப் பற்றிய தரவுகள், கல்வி, சுகாதாரம் ஆகிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து அதிலிருந்து கொள்கைகளை வரையறை செய்யும். பள்ளி மாணவர்களை (கிராமப்புற, நகரப்புற உள்ளிட்ட அனைத்து தரப்பு) சந்தித்துப் பேசி அவர்களுக்கு என்ன தேவை என்பதனைக் கண்டறியும். 

அனைத்துவிதமான ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடும். சிறப்புக் குழந்தைகளின் தேவைகள், சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களின் வலிகளைப் பதிவு செய்யும். இடைநிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து மாற்று ஏற்பாடுகளுக்குப் பரிந்துரைக்கும். வகுப்பறைக்கு உள்ளும் வகுப்பறைக்கு வெளியேயும் என்னென்ன தேவைகள் வேண்டும் எனப் பட்டியலிடும். 

கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சரத்துகளை நனவாக்க என்னென்ன தேவை எனக் கள நிலவரத்தைக் கண்டறிந்து கொள்கையில் சேர்க்கும். பள்ளி முடித்து எப்படி இலகுவாக கல்லூரிக்குள் சேர்வது, கல்லூரிகளில் மாற்றங்கள் தேவை, தொழில்நுட்பத்தை எப்படி சேர்ப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும். மேலும் இதனை நடைமுறைப்படுத்த தேவையான பட்ஜெட்டுகளையும் பட்டியலிடும். ஆசிரியர் கல்வி, ஆசிரியர் கல்வி மாற்றங்கள், தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துதல், பள்ளிக் கட்டணம், பள்ளியில் உட்கட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள், பெண் கல்விக்காக சிறப்பு ஏற்பாடுகள், சமூக நீதியை வலுப்படுத்த என்ன நடவடிக்கை, கல்லூரிகளின் விரிவாக்க எனப் பலப்பல தலைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும் படிக்க |  தொடக்கப்பள்ளி மாணவர்களின் அவலநிலை; 15 ஆண்டுகளாக மதிய உணவு கிடைக்கவில்லை

ஆனால் இவை பரிந்துரை. வரைவு. இது உறுதி அல்ல. இந்த வரைவை அரசிடம் சமர்ப்பித்து, அரசு இதனை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்தைக் கேட்டு அப்படியே வரைவைக் கொள்கையாக மாற்றலாம் அல்லது சில மாற்றங்களுடன் இதனைக் கொள்கையாக அறிவிக்கலாம். தமிழகக் கொள்கை வந்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்த (Implementation) ஒரு நீண்ட பயிற்சி செய்ய வேண்டும். இது மிக முக்கியம். சில விஷயங்கள் அடுத்த நாளே நடந்திடாது. கொஞ்சம் காலம் பிடிக்கும். அவையும் கொள்கையிலேயே குறிப்பிடப்பட வேண்டும். 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன, அடுத்த 10 ஆண்டுகளில் என்னவென்று கொள்கை குறிப்பிட வேண்டும். குழுவில் இன்னும் பிரதிநிதித்துவம் தேவை. மாணவர்களும் பெற்றோர்களும் தேவையா என்றால் இந்தப் பெரிய செயல்பாட்டில் அவர்களுக்குப் பங்கு வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கு ஏற்ப மறுவடிவம் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் குழுவில் இடம்பெறத் தேவையில்லை. ஒரு குழந்தை மீது அது பாரம். ஆனால் கட்டாயம் மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குழந்தைச் செயற்பாட்டாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகள், சட்டத்துறை, ஐடி துறை, சமகால கல்லூரிப் பேராசிரியர்கள், சமகால பெண் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் இருந்தாலும் இன்னும் சிறப்பாக இருக்கும். இவர்களின் கருத்துகளைக் குழு கேட்கும் என்பதில் ஐயமில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, உப குழுக்களை உருவாக்கும், பள்ளிக் கல்விக்கு, கல்லூரிப் படிப்பிற்கு, சட்டம், பொருளாதாரம் எனப் பல கூறுகள் உள்ளன. இவற்றைத் தனித்தனியே ஆராய்ந்து விவாதித்து ஒத்த கருத்திற்கு வரவேண்டும். இது பெரும்பணி. ஆனால் வருங்கால சந்ததியினருக்கு இது பெரிதும் வலுசேர்க்கும்''.

இவ்வாறு விழியன் தெரிவித்தார். 

மேலும் படிக்க |  பணியில் நீடிக்கத் தகுதியில்லை; ஊதிய உயர்வு பெற உரிமையில்லை: ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

Trending News