இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை, தீயாக பரவிவரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆக்ஸிஜன் தொடர்பான மாநிலங்களின் தேவைகளை மனதில் கொண்டு, அவற்றை விரைவில், மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க, ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுடனான ஒரு கூட்டம் நடத்தினார். தற்போது நம் முன்னால் உள்ள சவால்களை வெற்றி கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகக் குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
சவால்களை தீர்க்க அரசாங்கத்திற்கும் ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களுக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பைப் பேண வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்
கடந்த சில வாரங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்துள்ள உற்பத்தியாளர்களை பாராட்டிய பிரதமர், திரவ ஆக்ஸிஜனின் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.
நாட்டின் மருத்துவ தேவைகளைப் பூர்த்தி செய்ய தொழில்துறை ஆக்ஸிஜனிற்கு பதிலாக, மருத்துவ தேவைக்கான ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடக்கிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
நிலைமையை மேலும் சிறப்பாகச் கையாள, வரும் நாட்களில் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்ய தொழில்துறையின் முழு திறனையும் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேசினார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர, ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கான தளவாட வசதிகளையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார். ஆக்ஸிஜனை வழங்க மற்ற வாயுக்களின் டேங்கர்களைப் பயன்படுத்துமாறு அவர் தொழில்துறையை வலியுறுத்தினார்.
மத்திய அரசு, மாநில அரசுகள், தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை மற்றும் அனைத்து மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். சிறந்த ஒருங்கிணைப்பு இருந்தால், இந்த சவாலை சமாளிப்பது எளிதாக இருக்கும் என்றார். ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்களைப் பாராட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும் என்றும், அனைவரும் இணைந்தால், விரைவில் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த சந்திப்பின் போது, RIL தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் அம்பானி, SAIL தலைவர் சோமா மண்டல், JSW-வின் சஜ்ஜன் ஜிண்டால், டாடா ஸ்டீலின் நரேந்திரன், JSPL-ன் நவீன் ஜிண்டால், AMNS-ன் திலீப் ஓமான், LINDE-ன் எம். பானர்ஜி, ஐனோக்ஸின் சித்தார்த் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR