பாகிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள அராபிய கடற்பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடார் சரக்கு துறைமுகத்தை சீன அரசு நிர்வகித்து வருகிறது.
இந்த துறைமுகத்தை மையமாக வைத்து வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டம் வழியாக வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ள சீனா, இங்குள்ள கடல் பகுதியை சிறப்பு வர்த்தக மண்டலமாக அறிவித்து, பாதுகாத்து வருகிறது.
குவாடார் துறைமுகத்தை பாதுகாப்பதற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் மற்றும் கடற்படையின் தனிப்படை பிரிவு ஒன்று இயங்கி வருகிறது.
இந்நிலையில், பலூசிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை பாதுகாப்பதற்காக இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்களை பாகிஸ்தான் கடற்படைக்கு சீனா நேற்று வழங்கியது.
இந்த கப்பலில் வந்த சீன கடற்படையின் தலைமை அதிகாரிகள் நேற்று குவாடார் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவற்றை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான இந்த கப்பல்கள் குவாடார் துறைமுகத்தை ஒட்டியுள்ள அராபிய கடற்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவில் இருந்து குவாடார் துறைமுகத்தை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை ஒன்றையும் சீனா அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.