Lok Sabha Election 2024 Majority: 18ஆவது மக்களவை தேர்தல் அதன் கிளைமேக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், நாளை (ஜூன் 4) ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆந்திரா, ஒடிசா, சிக்கம், அருணாச்சலப் பிரதேசம் என நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலும், இந்த மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன் நடைபெற்றது.
மேலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டின் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியும் இடைத்தேர்தல் நடைபெற்றது. சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மட்டும் நேற்று எண்ணப்பட்டது. இதனால், 26 சட்டப்பேரவை தொகுதிகள், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் சட்டப்பேரவை தொகுதிகள், 542 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மெஜாரிட்டிக்கு 272 இடங்கள் தேவை
நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சூரத் நகரில் ஏற்கெனவே பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதால் மீதம் உள்ள 542 மக்களவை தொகுதிகளில் மட்டுமே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மத்தியில் ஆட்சி அமைக்க மொத்தம் 272 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். இதனால், இன்னும் பாஜகவுக்கு 271 தொகுதிகளே உள்ளன எனலாம். இந்தியா கூட்டணியும் 295 இடங்களில் நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை உடன் உள்ளது.
கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, சுமார் 2 மாதங்களாக நாடு முழுவதும் தேர்தலும், தேர்தல் பிரச்சாரமும் களைகட்டியது எனலாம். முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெற்றது.
முக்கியமான 6 மாநிலங்கள்
பிரதமர் மோடி, அமித் ஷா, ஜேபி நட்டா ஆகியோரின் வியூகங்களின்கீழ் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை சந்தித்தது. நாடு முழுவதும் 414 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட்டுள்ளது. கடந்த முறை 303 இடங்களை வென்ற நிலையில், இம்முறை 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் பெரும்பாலான முடிவுகளும் பாஜக நிச்சயம் 350+ இடங்களில் வெல்லும் என்றே கூறி வருகிறது.
கர்நாடகா, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா ஆகியவை பாஜகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் நிச்சயம் கடும் போட்டி நிலவும் மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இந்த ஆறு மாநிலங்களில் இருக்கும் மொத்தம் தொகுதிகளின் எண்ணிக்கை 204 ஆகும். மெஜாரிட்டியை பெற 272 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், இந்த மாநிலங்களில் மொத்தம் 150 முதல் 170 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே நிச்சயம் ஆட்சியமைக்கும் எனலாம்.
இந்தியா கூட்டணியின் நிலை?
ஒருவேளை இந்தியா கூட்டணி இந்த 6 மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றியது என்றால், நிச்சயம் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அந்த கூட்டணிக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 50 தொகுதிகளும் கிடைக்கும் எனலாம். எனவே, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க இந்த 6 மாநிலங்கள் முக்கியமாகும்.
என்டிஏ கூட்டணியின் நிலை?
அதேபோல் தான் பாஜகவுக்கும். பாஜக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பலமாக காணப்படுவதால் இந்த மாநிலங்களில் 130 சீட்களை தூக்கினாலே போதுமான மெஜாரிட்டி கிடைத்துவிடும். எனவே, நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது இந்த 6 மாநிலங்களின் நிலவரத்தை பார்த்துக்கொண்டே இருப்பதும் அவசியமாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ