ஹாதியா-வாக மதம் மாறிய அகிலா என்ற இளம்பெண்ணின் மீது தொடரப்பட்ட ''LoveJihad" வழக்கினை உச்ச நீதிமன்றம் மீண்டும் மார்ச் 8-க்கு ஒத்திவைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஹாதியா-வாக மதம் மாறிய அகிலா என்ற இளம்பெண் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக ஷபின் ஜஹான் என்பவர் மீது அகிலாவின் தந்தை கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களின் திருமணத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஜஹான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக ஹாதியா தெரிவிக்கையில் அதனை செல்லாது என அறிவிக்க நீதிமன்றத்தால் எப்படி முடியும். வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஹாதியா மேஜர் என்னும் பட்சத்தில் அவர் தான் யாருடன் செல்ல வேண்டும் என்பதை தான் முடிவு செய்ய வேண்டும்.
ஹாதியாவின் முடிவில் கேள்வியெழுப்ப யாருக்கும் உரிமை இல்லை. அதேப்போல் ஹதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை. எனவே ஹாதியாவின் திருமண நோக்கம் குறித்து தேசிய புலனாய்வு பிரிவு (NIA) தலையிட இயலாது" என தெரிவித்தது.
அதைதொடர்ந்து ஹாதியா "நான் இஸ்லாமிய பெண், இஸ்லாமிய பெண்ணாகவே என் கணவருடன் வாழ விரும்புகின்றேன்" என்று பிப்ரவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் வழக்கினை பிப்.,22-க்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நீதிபதிகளின் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான மேலும் விசாரணையை வருகிற மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Kerala 'Love Jihad' case: Supreme Court adjourned the matter for further hearing till March 8
— ANI (@ANI) February 22, 2018