மத்திய பிரதேச அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் காங்கிரஸ் MLA ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். மேலும் தனது முடிவு குறித்து ‘முன்னேற வேண்டிய நேரம்’ இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் அரசியல் நாடகத்திற்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) March 10, 2020
சிந்தியா மற்றும் மத்திய பிரதேசத்தின் சுமார் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் ராஜினாமாவை நாளின் பிற்பகுதியில் அறிவிப்பார்கள் என்று வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. மேலும் ஷா அல்லது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் சிந்தியாவும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது ஜோதிராதித்யா சிந்தியா-வின் ராஜினாமா கடிதம் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் புதிய அரசியல் நெருக்கடி திங்கள்கிழமை (மார்ச் 9) மாலை தொடங்கியது, அமைச்சர்கள் உட்பட சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் சிந்தியாவை ஆதரித்து, கமல்நாத் தலைமையிலான அரசில் இருந்து விலக முடிவு செய்தனர்.
கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் சுற்றி காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட உடனேயே மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனையடுத்து கமல்நாத் திங்கள்கிழமை இரவு தனது இல்லத்தில் மூத்த தலைவர்களின் அவசரக் கூட்டத்தை அழைத்தார், கூட்டத்திற்குப் பிறகு அவரது அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமாக்களை சமர்ப்பித்தனர். அமைச்சர்கள் முதல்வர் கமல்நாத் மீதும் நம்பிக்கை தெரிவித்ததோடு, அமைச்சரவையை மறுசீரமைக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே பாஜக சார்பில் மத்தியில், மோடி அரசாங்கத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மாநிலங்களவை மற்றும் அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. அதற்கு ஈடாக, மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர சிந்தியா உதவ வேண்டும் என்ற அடிப்படையில் அவர் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜோதிராதித்யா சிந்தியா திங்களன்று டெல்லியில் கலந்து கொண்டாலும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியுடன் அவர் நியமனம் குறித்து எந்த செய்தியும் வரவில்லை.
இதற்கிடையில், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் சவுகான் திங்கள்கிழமை (மார்ச் 9), மாநிலத்தில் அரசியல் நெருக்கடி காங்கிரஸின் உள் சச்சரவு காரணமாக இருப்பதாகவும், அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். முதல்வர் கமல்நாத் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக அக்கறை காட்டவில்லை என்று சௌகான் வலியுறுத்தினார், ஆனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே தொடர்ந்து மோதல்கள் இருப்பதால் அரசாங்கம் தானாகவே வீழ்ச்சியடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
230 உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டசபையில், காங்கிரசில் 114 எம்.எல்.ஏக்கள் மற்றும் நான்கு சுயேச்சைகள், மூன்று சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் இரண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பாஜகவில் 109 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.