மக்களவைத் தேர்தலில் BJP-யை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் வகையில் டெல்லியில் நவம்பர் 22 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம்....
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், BJP-க்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்து அவர் விரிவாக விவாதித்தார். இதையடுத்து, சீதாராம் யெச்சூரி, சரத்பவார், பரூக் அப்துல்லா, முலாயம்சிங், தேவகவுடா ஆகியோரை நேற்று சந்திரபாபு சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், நவம்பர் 9 ஆம் தேதி சென்னை வந்த அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினார். சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, சந்திரபாபுவை ஆந்திராவின் அமராவதி நகரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, 22 ஆம் தேதி டெல்லி ஆந்திர பவனில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். BJP-யை எதிர்ப்பதற்கான வியூகம் இக்கூட்டத்தில் வகுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.