மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

"மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே ஜி-க்கு வாழ்த்துக்கள். அவர் மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்" என பிரதமர் மோடி ட்வீட்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 28, 2019, 08:53 PM IST
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து title=

புது டெல்லி: சுமார் ஒரு மாத காலமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பல அரசியல் அரங்கேற்றம் நடந்த  பிறகு, இறுதியாக இன்று 59 வயதான உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் 18 வது முதல்வராக பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட உத்தவ் தாக்கரே ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் மகாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக விடாமுயற்சியுடன் செயல்படுவார் என்று நான் நம்புகிறேன்" என்று வாழ்த்து செய்தி கூறியுள்ளார். 

 

உத்தவ் தாக்கரேவுக்குப் பிறகு சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுபாஷ் தேசாய் பதவியேற்றனர். அவருக்குப் பிறகு என்.சி.பி தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல் மற்றும் சாகன் பூஜ்பால் பதவியேற்றனர். அவருக்குப் பிறகு, பாலாசாகேப் தோரத் மற்றும் டாக்டர் நிதின் ரவுத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பாக பதவி ஏற்றுக்கொண்டனர். சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதேபோல பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாத சோனியா மற்றும் ராகுல் காந்தி அவர்களும் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், தனது வாழ்த்துக் கடிதத்தில், மகாராஷ்டிராவின் முதல்வராக நீங்கள் பதவியேற்கிறீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு. மேலும் உங்களை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

 

சிவசேனாவை சேர்ந்த மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே ஆகியோருக்குப் பிறகு, முதலமைச்சர் பதவியை வகிக்கும் மூன்றாவது அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆவார்.

இன்றைய பதவியேற்பு விழாவில் பல பெரிய அரசியல் பிரமுகர்கள் மேடையில் இருந்தனர். மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனாவின் (எம்.என்.எஸ்) தலைவரான ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் சகோதரர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜூன் கார்கே, கபில் சிபல், என்.சி.பி தலைவர் சுப்ரியா சுலே, அஜித் பவார், நவாப் மாலிக், சாகன் பகுல், ஷேவ் பகுபால் தலைவர் மனோகர் ஜோஷி, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதே நேரத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானி ஆகியோரும் மேடையில் இருந்தனர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார் என்பது சிறப்பு.

மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. மற்ற இடங்களில் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News