ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தடை- பிரதமர் மோடி அறிவிப்பு

Last Updated : Nov 9, 2016, 09:01 AM IST
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தடை- பிரதமர் மோடி அறிவிப்பு  title=

பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். 

கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று அவர் அறிவித்தார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியுள்ளார்.

அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும். 

11-ம் தேதி நள்ளிரவு வரை, சர்வதேச விமான நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள மருந்தகங்கள், பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகள், கூட்டுறவு சங்கங்கள், மாநில அரசுகள் நடத்தும் பால் விற்பனை நிலையங்கள், உடல் எரியூட்டும் இடங்கள் ஆகியவற்றில் இந்த நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகள், தலைமை தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதற்கு ஆதார் அட்டை, வருமான வரி பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

டிசம்பர் 30-ம் தேதிக்குள், இந்த நோட்டுகளை மாற்ற இயலாதவர்கள், ரிசர்வ் வங்கியில் பிரகடனம் எழுதிக் கொடுத்து மாற்றி கொள்ளலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை, அவ்வாறு மாற்றி கொள்ளலாம்.

நவம்பர் 9-ம் தேதி எந்த வங்கிகளும் செயல்படாது. நவம்பர் 9-ம் மற்றும் 10-ம் தேதி அனைத்து ஏ.டி.எம்.களும் இயங்காது. தொடக்கத்தில் சில நாட்களுக்கு ஏ.டி.எம்.மில் கார்டு மூலம் 2௦௦௦ ரூபாய் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். பின்னர், இத்தொகை 4௦௦௦ ரூபாயாக உயர்த்தப்படும். 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழக்கம்போல் செல்லுபடி ஆகும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காசோலை, டிமாண்ட் டிராப்ட், நெட் பேங்கிங், மின்னணு பண பரிவர்த்தனை போன்ற வழிகளில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப் பாடும் கிடையாது.

புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு கொண்டுவரப்படும். இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

 

Trending News