கோவிட் மூன்றாவது அலையை தவிர்க்கமுடியாது: எச்சரிக்கும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர்

அதிக அளவு வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், தொற்றின் மூன்றாவது கட்டத்தை தவிர்க்க முடியாது.  இந்த மூன்றாவது கட்டம் எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொற்றின் புதிய அலைகளுக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜய ராகவன் புதன்கிழமை தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 08:57 AM IST
  • கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது-முதன்மை அறிவியல் ஆலோசகர்.
  • மூன்றாவது கட்டம் எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை-முதன்மை அறிவியல் ஆலோசகர்.
  • கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் முப்பது மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவிட் மூன்றாவது அலையை தவிர்க்கமுடியாது: எச்சரிக்கும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர்  title=

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலின் அளவும் வேகமும் அதிகமாக இருப்பதால், கோவிட் -19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜய ராகவன் புதன்கிழமை தெரிவித்தார்.

எனினும், மூன்றாம் கட்டம் எப்போது வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய ராகவன், தொற்றின் புதிய அலைகளுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், "அதிக அளவு வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், தொற்றின் மூன்றாவது கட்டத்தை தவிர்க்க முடியாது.  இந்த மூன்றாவது கட்டம் எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொற்றின் புதிய அலைகளுக்கு அனைவரும் தயாராக வேண்டும்" என்றார்.

கொரோனா வைரஸின் (Coronavirus) தற்போதைய மாறுபாடுகளுக்கு எதிராக இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

"உலகம் முழுவதிலும், இந்தியாவிலும் வைரசின் புதிய மாறுபாடுகள் தோன்றும். வரும் காலங்களில் நோயெதிர்ப்பு சக்தியை மீறிய மாறுபாடுகளும், நோயின் தீவிரத்தை குறைக்கும் அல்லது அதிகரிக்கும் மாறுபாடுகளும் தோன்றக்கூடும்" என்று அவர் கூறினார்.

"இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் வரக்கூடும் புதிய மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். அவற்றை எதிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து வருகின்றன. ஒரு தீவிர ஆராய்ச்சி திட்டமான இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடந்து வருகிறது" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

"தொற்றின் புதிய மாறுபாடுகள் முதல் வைரசைப் (Virus) போலவே பரவுகின்றன. இவற்றின் பரவும் தன்மைகள் மாறுபட்டு இருக்கவில்லை. இது மனிதர்களைப் பாதித்து, அவர்கள் மூலம் இன்னும் பலருக்கு பரவுகிறது." என்றார் ராகவன். 

ALSO READ: கொரோனா - ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 61% மக்கள் கவலையாகவும் கோபமாகவும் உள்ளனர்

கர்நாடகா, வங்காளத்தில் COVID-19 நோய்த்திற்றின் போக்கில் ஏற்றம்  

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில், நாடு தற்போது தீவிரமான நீண்ட கோவிட் அலையைக் கண்டு வருகிறது, இது கணிக்கப்படவில்லை என்று கூறினார்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு (Tamil Nadu), மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள்  கொரோனா தொற்றால் ஏற்படும் தினசரி இறப்புகளிலும் உயர்வைக் கண்டு வருவதாக அகர்வால் குறிப்பிட்டார்.

"12 மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். 7 மாநிலங்களில் 50,000 முதல் 1 லட்சம் வரையிலான நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50,000 க்கும் குறைவானோர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஆந்திராவில் சுமார் 1.5 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்" என்று லவ் அகர்வால் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் முப்பது மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இவற்றில் கேரளாவிலும் 10, ஆந்திராவில் ஏழு, கர்நாடகாவில் மூன்று மற்றும் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் அடங்கும். 

கேரளாவில், கோழிக்கோடு, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், ஆலப்புழா, பாலக்காடு, திருவனந்தபுரம், கண்ணூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3.8 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்னிக்கை 2.6 லட்சம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 3,780 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ: சலிக்காமல் தாக்கும் கொரோனா தொற்று: உலக அளவில் இதுவரை 15,49,66,166 பேர் பாதிப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News