தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!!
புதுடெல்லி: தம் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை 6 மாதத்தில் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தருண் தேஜ்பால் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார். கோவாவில் ஒரு தங்கும் விடுதியின் லிப்டில் வைத்து தருண் தேஜ்பால் தன்னிடம் அத்துமீறியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டில் தருண் தேஜ்பால் கைது செய்யப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று வாதாடிய தருண் தேஜ்பால் தரப்பு வழக்கறிஞர்கள், வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். கோவா ஓட்டலின் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் இருதரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊடகவியலாளர் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Sexual assault case against journalist Tarun Tejpal: Supreme Court says the trial in the case is to be concluded in a period of six months https://t.co/LXVDiHhlNP
— ANI (@ANI) August 19, 2019
நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற பெஞ்ச், தெஹல்கா நிறுவனர் ஆசிரியர் மீதான வழக்கு தொடரும் என்று கூறினார். தேஜ்பாலுக்கு எதிரான விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்கும்படி பெஞ்ச் கீழ்மட்டவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.