உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
இதில் 98 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் ஒக்ராம் இபோபி சிங், துணை முதல்வர் கெய்கங்காம் மற்றும் மனித உரிமை போராளியான இரோம் ஷர்மிளா ஆகியோரின் அரசியல் எதிர்காலம் நாளைய தேர்தலில் நிர்ணயிக்கப்பட உள்ளது.
மேலும் இங்கு தொடர்ந்து 3 முறையாக (15 ஆண்டுகள்) ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது தோல்வி அடையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோவா, பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இதை யடுத்து இந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.